பாலியல் புகாருக்கு ஆளான ஐஜி-யை மாற்ற வேண்டும்..! லஞ்ச வழக்கில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

'பாலியல் புகாருக்குள்ளான லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநரை உடனடியாக இடமாற்றம் செய்துவிட்டு, நேர்மையான ஐஜி-யை இணை இயக்குநராக நியமித்து, அமைச்சர்கள், துணை முதலமைச்சர் மீதான ஊழல் புகார்களை விரைந்து விசாரிக்க வேண்டும்' என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'அமைச்சர்கள், துணை முதலமைச்சர், முதலமைச்சர் ஆகியோர்மீது கொடுக்கப்படும் ஊழல் புகார்கள் அனைத்தும் தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் 'ஆமை வேகத்தில்' கூட நகர முடியாமல் தேங்கிக்கிடப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட போலீஸ் டிஜிபி-க்கள் மீது வருமான வரித்துறை அளித்த 'குட்கா' டைரி தொடர்பான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டதால், இறுதியில் அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு அனுப்பி, அதை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்திருக்கிறது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டிலும், அவரது அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டு பற்றிய அறிக்கை தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டு, அதுவும் தற்போது லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் முடங்கிக்கிடக்கிறது. 

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது கொடுக்கப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த புகாரின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அமைதிகாத்தது. பிறகு, கழகத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றமே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. அந்த விசாரணையை மேற்கொள்ள, செப்டம்பரில் ஓய்வுபெற இருக்கும் திருநாவுக்கரசு என்ற கூடுதல் டிஎஸ்பி-யை போலீஸ் அகாடமியிலிருந்து அவசர அவசரமாக லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு மாற்றி, அவர்மூலம் அந்த வழக்கை நீர்த்துப்போகச்செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெறுகின்றன என்று செய்திகள் வருகின்றன.

 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஊழல்கள்குறித்து விசாரித்து, அவர்மீது நடவடிக்கை எடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு, அதுவும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க அமைச்சர்கள், துணை முதலமைச்சர், முதலமைச்சர் ஆகியோர் மீதுள்ள ஊழல் புகார்களை விசாரிக்கும் இந்த லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் இணை இயக்குநரான ஐஜி மீது, இப்போது ஒரு பெண் எஸ்பி-யே பாலியல் புகார் அளித்து, அந்தப் புகாரை , 'விசாகா கமிட்டி' அடிப்படையில் தற்போது அவசரம் அவசரமாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் டிஜிபி தலைமையிலான 'துறை சார்ந்த விசாரணைக் கமிட்டி' நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது.

அதற்கு முன்பாகவே, பாலியல் தொல்லைக்கு உள்ளான எஸ்பி., லஞ்ச ஊழல் தடுப்புத் துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். ஆனால், புகாருக்கு ஆளாகியிருக்கும் அதே துறையின் இணை இயக்குநர்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
புகாருக்கு உள்ளான ஐஜி-யின் கீழ்தான் அ.தி.மு.க அமைச்சர்கள் முதல், முதலமைச்சர் வரை உள்ள அனைத்து லஞ்ச ஊழல் புகார்களும் விசாரணையில் இருப்பதை இந்த நேரத்தில் மறந்துவிட முடியாது. சீசரின் மனைவி, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். ஆனால், இப்படியொரு கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு அதிகாரியை வைத்து லஞ்சப் புகார்களை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்... எப்படி ஊழல்மீது நடவடிக்கை எடுக்கப்படும்?  என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

 ஆகவே, அ.தி.மு.க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறை அனுப்பியுள்ள அறிக்கை விவரங்களைப் பொது மக்களின் பார்வைக்கு வெளியிட்டு, அந்த அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கவும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதான ஊழல் வழக்கை ஓய்வுபெறப்போகும் அதிகாரியை வைத்து விசாரிப்பதற்குப் பதிலாக,  லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரியையே விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரிக்கவும், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், மாநில விஜிலென்ஸ் ஆணையர், தலைமைச் செயலாளர் ஆகியோர் நேர்மை-நியாயம்- நீதியைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, புகாருக்குள்ளான இணை இயக்குநரின் கீழ் நடைபெறும் இந்த ஊழல் விசாரணைகள் நிச்சயமாக பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமாக நடைபெறாது என்பதால், அவரை உடனடியாக மாற்றிவிட்டு, நேர்மையான ஒரு ஐஜி-யை இணை இயக்குநராக நியமித்து, இந்த ஊழல் வழக்குகளை எல்லாம் விரைவாகவும் முறையாகவும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!