வாகனச் சோதனையில் டிராபிக் போலீஸை தெறிக்கவிட்ட ஆட்டோ டிரைவர் 

 வாகனசோதனையில் சிக்கிய ஆட்டோ டிரைவர் முருகதாஸ்

சென்னையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின்  கையைக் கடித்த ஆட்டோ டிரைவரை போலீஸார் கைதுசெய்தனர். 

சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகில் போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் நேற்றிரவு ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அந்த ஆட்டோவை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மடக்கினார். டிரைவரிடம், வாகனத்தின் ஆவணங்களைக் கேட்டார். அப்போது ஆட்டோ டிரைவர், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரிடம்  தகராறுசெய்தார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர், ஆட்டோவின் சாவியை எடுத்தார். 

 ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், சப்-இன்ஸ்பெக்டரின் கையைப் பிடித்துக் கடித்தார். வலியால் சப்-இன்ஸ்பெக்டர் அலறித் துடித்தார். இதைப் பார்த்த சக காவலர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டனர்.  தப்பி ஓட முயன்ற ஆட்டோ டிரைவரை உடனே போக்குவரத்து போலீஸார்  மடக்கிப்பிடித்தனர். பிறகு, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் டிரைவரை ஒப்படைத்தனர். 

இதற்கிடையில், காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தார். விசாரணையில் அவரின் பெயர், முருகதாஸ் என்றும், நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது.  போக்குவரத்துக் காவலரை பணிசெய்யவிடாமல் தடுத்ததற்காக, முருகதாஸ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

வாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை ஆட்டோ டிரைவர் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!