வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (24/08/2018)

கடைசி தொடர்பு:19:34 (24/08/2018)

''இன்னும் பல கிராமங்கள்ல தண்ணீர் வடியலை'' - நாமக்கல் ஈரோடு கரையோர மக்கள்

காவிரி ஆற்று வெள்ளத்தால் கொள்ளிடத்தின் வடக்குக் கரைப் பகுதியான கடலூர் மாவட்டமும், கொள்ளிடத்தின் தெற்குக் கடைப் பகுதியான நெல்லை மாவட்டமும் மிகப்பெரிய அளவு பாதிப்புக்குக் காரணம், பொதுப்பணித்துறை கரைகளைப் பலப்படுத்தாமல் விட்டதே.

''இன்னும் பல கிராமங்கள்ல தண்ணீர் வடியலை'' - நாமக்கல் ஈரோடு கரையோர மக்கள்

ர்நாடகா, கேரளாவில் கொட்டித்தீர்த்த பேய் மழையின் காரணமாக, காவிரி ஆற்றிலும் பவானி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில்  மேட்டூர் அணைக்கு வந்த  சுமார் 2 லட்சம் கன அடி நீர் அப்படியே உபரி நீராகத் திறந்து விடப்பட்டது. அதேபோல, பவானி ஆற்றில் இருந்து வந்த 1 லட்சம் கனஅடி நீரும் பவானி கூடுதுறையில் கலந்து 3 லட்சம் கனஅடி நீராக காவிரி ஆற்றில் பாய்ந்தோடியது.

இதனால் நாமக்கல், ஈரோடு மாவட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளை மூழ்கடித்து பெரும் சேதத்தை விளைவித்துச் சென்றதோடு, கொள்ளிடம் ஆற்றில் இருந்து கட்டுக்கடங்காத வெள்ளம் வெளியேறியதால், காவிரியின் கடை மடைப் பகுதியான கடலூர் மாவட்டத்தில் சுமார் 3000 வீடுகளும், நாகை மாவட்டத்தில் சுமார் 700 வீடுகளும் தண்ணீருக்குள் தத்தளிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. கடலூர் மாவட்டம்  சிட்டு காட்டூர், கீழ் குண்டலவாடி, அக்கரை ஜெயம்கொண்டபட்டினம் போன்ற கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. அங்கிருக்கும் மக்களை வெளியேற்ற முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

இதையடுத்து, காவிரியின் கரையோரப் பகுதிகளுக்குச் சென்று,  நிலவரத்தைக் காணச் சென்றபோது...

வெள்ளம் - நாமக்கல் - ஈரோடு மக்கள்

குமாரபாளையத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவர், ''காவிரி ஆறும், பவானி ஆறும் கூடுதுறையில் சங்கமித்துப் பாய்ந்தோடும் முதல் பகுதியாக குமாரபாளையம் இருக்கிறது.  காவிரியில் வந்த 3 லட்சம் கனஅடி நீரால் குமாரபாளையத்தில் உள்ள  காவிரிக் கரையோரப் பகுதிகளான மணிமேகலை தெரு, இந்திரா நகர், அண்ணாநகர், நகராட்சி பின்புறம் பாலக்கரை, மொல்லப்பாளையம் போன்ற பல பகுதிகளில் வீட்டை மூழ்கடித்துச் சென்றது. இதனால், குமாரபாளையம் பகுதியில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.  

பலரும், ''வீட்டில் இருந்த பொருள்களை எடுக்க முடியாமல் வெளியேறினோம். வீட்டுக்குள் இருந்த பொருள்களைத் தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது. எங்களை ஜே.கே.கே நகராட்சி மண்டபம். சி.எஸ்.ஐ  பள்ளிக்கூடம், புத்தர் வீதியில் உள்ள கச்சேரி பள்ளிக்கூடம், நடனமலை விநாயகர் திருமண மண்டபம், ஆகிய 4 முகாம்களில் தங்க வைத்தார்கள். அரசுத் தரப்பிலும், தனியார் அமைப்பினரும் எங்களுக்கு உதவிகள் செய்ததோடு, மூன்று வேளையும் சுடச்சுட உணவு வழங்கினார்கள்.

வெள்ளம் - மக்கள்

ஒரு வாரத்துக்குப் பிறகு தண்ணீர் வற்றியதை அடுத்து, நேற்று மாலை வீட்டுக்கு வந்திருக்கிறோம். அரசு தரப்பில் எங்களுக்கு 10 படி அரிசி, பருப்பு, சக்கரை, பாய், பெண்கள் அணிந்துகொள்ள நைட்டி, ஆண்கள் அணிந்துகொள்ள வேட்டி, 2 சட்டை, சோப்பு, சீப்பு என 20 பொருள்கள் கொடுத்திருக்கிறார்கள். இது நிரந்தரமானது அல்ல. பல வீடுகள் ஊறிப்போய் இடிந்துவிழும் தருவாயில் இருக்கிறது. எங்களுக்கு அரசு மாற்று இடத்தை ஒதுக்கிக்கொடுத்து, நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும்'' என்றார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவிரிக் கரையோரப் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரத்திடம் பேசியபோது, ''காவிரி வெள்ளப் பெருக்கால் பள்ளிப்பாளையத்தில் உள்ள ஆவுத்திபாளையம், குமரன் நகர், நாட்டாகவுண்டன்புதூர், புதன் சந்தை, பாவடி தெரு, முருகன் கோயில் பகுதி, சத்யா நகர், ஆவாரங்காடு, மீனவர் தெரு, முனியப்பன் கோயில் பின்புறம் எனப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பள்ளிப்பாளையம் பகுதியில் மட்டும் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

வெள்ளம் - நாமக்கல் - ஈரோடு - மக்கள்

அதையடுத்து, எங்களை புதுப்பாளையம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள இ-சேவை மையம், ஆவரங்காடு நகராட்சி திருமண மண்டபம், அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,  பள்ளிப்பாளையத்தில் உள்ள செளடேஸ்வரியம்மன் மண்டபம், செங்குந்தர் மண்டபம், நாட்டாகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, குமரன் நகரில் உள்ள ஆதிதிராவிடர் விடுதி, ஆவுத்திபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி என 8 முகாம்களில் தங்க வைத்தார்கள்.

தற்போது தண்ணீர் வடிந்துள்ளதை அடுத்து, வீட்டுக்கு வந்திருக்கிறோம். ஆனாலும், எங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கிறோம். எங்களுக்கு பண உதவியும், பொருளாதார உதவியும் செய்வதோடு, மாற்று இடம் கொடுத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும்'' என்றார்.

தண்ணீர் -நாமக்கல் - ஈரோடு - வெள்ளம்

இதுபற்றி  சீர்காழியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகசண்முகம், ''கடலூர் மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் உள்ள குமராசி பஞ்சாயத்துக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரை பகுதிகளான சிட்டு காட்டூர், கீழ் குண்டலவாடி, அக்கரை ஜெயம்கொண்டபட்டினம், மாரத்தான் தோப்பு, வேலகுடி, பழைய நல்லூர், அகர நல்லூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் காவிரி வெள்ள நீர் புகுந்துகொண்டதால் மக்களை மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

உணவுப் பொட்டலைகளைக்கூட பரிசலிலும், படகிலும் கொண்டுபோய் கொடுக்கும் நிலை உருவானது. இப்பகுதிகளில் மட்டும் சுமார் 2500 முதல் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று வரை சிட்டு காட்டூர், கீழ் குண்டலவாடி, அக்கரை ஜெயம்கொண்டபட்டினம் போன்ற கிராமங்களில் தண்ணீர் வடியாமல் இருக்கிறது. இன்னும் அப்பகுதி மக்களுக்கு படகு மூலமே உணவுப் பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுவருகிறது.

நாமக்கல் - ஈரோடு வெள்ளம் மக்கள்

 சமூக ஆர்வலர் ஜெகசண்முகம்தண்ணீர் வடிந்த பகுதிகளில்கூட இன்னும் மக்கள் வீடுகளுக்குத் திரும்ப அச்சப்படுகிறார்கள். வேலகுடி ஆற்றில் ஒரு காலத்தில் அதிக அளவு முதலைகள் இருந்தன. காவிரி ஆற்றில் முதலைகள் அடித்துவருவதால், வீடுகளுக்குள் முதலை இருப்பதாக அச்சப்பட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் நுழையவே முடியாத சூழ்நிலை இருந்துவருகிறது.

இதேபோல நாகை மாவட்டத்துக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் தெற்குக் கரையோரப் பகுதிகளான நாதல் படுகை, சிட்டுப் படுகை, ஆளகுடி, நானல்படுகை போன்ற பகுதிகளில் சுமார் 600 முதல் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடும் தண்ணீர் நேராக ஆளகுடியில் முட்டும் என்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரிந்தும், கரைகளைப் பலப்படுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

காவிரி ஆற்று வெள்ளத்தால் கொள்ளிடத்தின் வடக்குக் கரைப் பகுதியான கடலூர் மாவட்டமும், கொள்ளிடத்தின் தெற்குக் கடைப் பகுதியான நெல்லை மாவட்டமும் மிகப்பெரிய அளவு பாதிப்புக்குக் காரணம், பொதுப்பணித்துறை கரைகளைப் பலப்படுத்தாமல் விட்டதே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிர்வாணங்கள் இன்னும் முழுமையாகச் சென்றுசேரவில்லை. இப்பகுதிகள், கடல் முகத் துவாரப் பகுதிகளாக இருப்பதால் முழுமையாக அரசின் கவனத்துக்குச் செல்லவில்லை. அரசு உடனே கவனம்செலுத்தி, இந்த மக்களுக்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்