வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (24/08/2018)

கடைசி தொடர்பு:11:15 (26/08/2018)

``கொள்ளைபோன கொள்ளிடம்... யார் காரணம்?" மணலரசியல் சொல்லும் இளைஞர்கள்

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் மீது இருந்த 180 வருட பழைமை வாய்ந்த முக்கொம்பு தடுப்பணை, 90 வருட பழைமை வாய்ந்த இரும்புப் பாலம் ஆகியவை பராமரிப்பின்றி உடைந்துபோயிருக்கின்றன.

``கொள்ளைபோன கொள்ளிடம்... யார் காரணம்?

`` `நீர் மேலாண்மையில் சிறந்த அறிவு கொண்டவர்கள் தமிழர்கள்' என்று பெருமை சொல்லிக்கொண்ட காலமெல்லாம் போய், நீர் மேலாண்மை என்றால் என்ன’’ என்று கேள்வி கேட்டு நிற்கும் நிலைமைக்கு நம்மைக் கொண்டு வந்ததுதான் தமிழக அரசின் இமாலய சாதனைகளில் ஒன்று. கடந்த ஒரு மாதமாகக் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபிறகும்கூட கடைமடைப் பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் சென்று சேரவில்லை என்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். இதைவிட முக்கியமான ஒன்று... திருச்சி கொள்ளிடம் ஆற்றின் மீதான 180 வருடப் பழைமை வாய்ந்த முக்கொம்பு தடுப்பணை, 90 வருடப் பழைமை வாய்ந்த இரும்புப் பாலம் ஆகியவை பராமரிப்பின்றி உடைந்துபோயிருக்கின்றன. இந்தச் சிறப்பெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் மணிமகுடத்தில் மற்றுமொரு மயிலிறகு!

கொள்ளிடம் ஆறு

'மணல் கொள்ளையால் தடுப்பணை உடையவில்லை. பழைமையின் காரணமாகவும் அதிக வெள்ளப் பெருக்கின் காரணமாகவும்தான் தடுப்பணையும் பாலமும் இடிந்து விழுந்துள்ளன' என மனசாட்சியைக் கழட்டி வைத்துவிட்டுப் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் ஆட்சியாளர்கள். அங்கு நடப்பது மணல் மாஃபியா! திருச்சியிலிருந்து கரூர் செல்லும்போது சற்று வலது பக்கம் திரும்பிப் பாருங்கள். ஆறு இருப்பதற்கான சுவடே தெரியாவண்ணம் பல்லாயிரக்கணக்கான லாரிகள் வரிசைகட்டி நிற்கும். இங்கிருந்து சுரண்டப்படும் மணல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. ஏன்... வெளிநாடுகளுக்கும் கப்பல் மூலமாகச் சென்றுகொண்டுதான் இருக்கிறது. இங்கு நடந்த இழப்புகளுக்கு அரசும், அதிகாரிகளும்தான் காரணம். வெள்ளம் அல்ல...'' என்று காவிரிக் கரையோர மக்கள் சொல்லிவருகிறார்கள். 

கொள்ளிடம் ஆறு

'பாலம் மற்றும் தடுப்பணை இடிந்து விழுந்ததற்கு மணல் மாஃபியாதான் காரணம்' என்றும் அதுகுறித்த ஆய்வுகளுக்காகவும் களப்பணியில் இறங்கியுள்ளனர் 'மக்கள் பாதை' இயக்கத்தினர். இன்று காலையிலிருந்து இவர்கள் ஆற்றில் களப்பணி செய்துகொண்டிருக்கிறார்கள். திருச்சி மண்டல பொறுப்பாளரான தண்ணீர் வினோத் இதுபற்றி நம்மிடம் பேசியபோது, "முக்கொம்பு தடுப்பணை மற்றும் இரும்புப் பாலம் ஆகியவை இடிந்து விழுந்துள்ளன. திருவெறும்பூர் கூட்டுக்குடிநீர் திட்டம் பாலம் விரிசல் விட்டு கீழே இறங்கியுள்ளது. இவையெல்லாம் கொள்ளிடம் ஆற்றில் இருப்பவை. இவை இடிந்து விழுந்ததற்கும், கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்கும் காரணம்.... அளவுக்கு மீறி மணல் கொள்ளை நடந்ததே. 

கொள்ளிடம் ஆறு

மணல் கொள்ளை என்பது நீண்டகாலமாக நடைபெற்று வந்தாலும், 2010-ம் ஆண்டுக்குப் பிறகுதான் கொள்ளிடம் ஆற்றையே கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக, தற்போது இடிந்த பாலம், உடைந்துபோன தடுப்பணை, இறங்கிப்போன கூட்டுக் குடிநீர் நிலையப் பாலம் ஆகியவை கொள்ளிடம் ஆற்றில் இருப்பவை. இதற்குக் காரணம் கொள்ளிடம் ஆற்றைச் சூறையாடியது மட்டுமே. முக்கொம்பில் இருந்து கல்லணை வரை சுமார் 14 மைல் தூரம் உள்ளது. இடைப்பட்ட தூரம் முழுவதிலும் கொண்டையம்பேட்டை, திருவளர்சோலை, கிளிக்கூடு, உத்தமர்சீலி போன்ற ஊர்களில் பல மணல் குவாரிகளை அமைத்துவிட்டனர். 

கொள்ளிடம் ஆறு

ஒவ்வொரு குவாரிகளும் 30 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்டது. இங்கெல்லாம் மணல் எடுக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினால்தான் இப்பகுதியில் தண்ணீரே விடாமல் இருந்தனர். தற்போது வெள்ளம் வந்ததால், கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் போக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மணல் எடுத்த இடத்தில் இருக்கும் பள்ளத்தை நிரப்ப மேடு பகுதிகளில் உள்ள மணல் அடித்து வரப்பட்டது. அதனால் முக்கொம்பு தடுப்பணை மற்றும் இரும்புப் பாலம் பகுதிகளில் அதிக அளவில் மணல் அடித்துச் செல்லப்பட்டது. இந்த ஒரு காரணத்தினாலேயே தடுப்பணையும் இரும்புப் பாலமும் விழுந்துவிட்டது. கடந்த 2015-ம் ஆண்டு முக்கொம்பு பாலத்தைச் சீரமைக்க அரசு 10 கோடி ரூபாய் வழங்கியது. அந்தப் பணத்தை அதிகாரிகள் என்ன செய்தார்கள்? அதுபோல 2016-ம் ஆண்டு ஜெயலலிதா, முக்கொம்பு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 3.1 கோடி ரூபாய் அளித்தார். இன்று முக்கொம்பு சுற்றுலாத் தளம் எப்படி இருக்கிறது என்று நீங்களே வந்து பாருங்கள். 

கொள்ளிடம் ஆறு

மணல் அரிப்பால் தடுப்பணை மற்றும் இரும்புப் பாலம், கூட்டுக் குடிநீர் திட்டப் பாலம், மின்சார கம்பங்கள் என அனைத்துமே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அப்படியானால், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள புதிய பாலமும் கண்டிப்பாகப் பழுதடைந்திருக்கும். அதேபோல கல்லணை எந்த அளவுக்கு இருக்கிறது என்ற ஆய்வையும் உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், கரிகால் சோழன் கட்டிய கல்லணை என்று பெருமை பேசித்திரியும் நமக்கு அதுவும் சொந்தம் இல்லாமல் போகும். இதைப் பற்றியக் கள ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யவிருக்கிறோம். வருகிற 26-ம் தேதியும் கள ஆய்வுப் பணி நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் அனைத்துத் தரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அரசுக்கு மக்களை நினைத்துப் பயம் வரும். 

கொள்ளிடம் ஆறு

மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்பு உணர்வு நிச்சயம் வர வேண்டும். அதிகாரவர்க்கத்தை நம்பினால் நம் வாழ்வாதாரம் முழுவதையும் இழக்க நேரிடும். தரமற்ற ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் இன்னும் நாம் நிறைய இழக்கப்போகிறோம். நாம் இவர்களைக் கேள்வி கேட்காதவரையில், இங்கு எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. இனி அனைத்து ஊர்களிலும் நடக்கும் மணல் கொள்ளையை மக்களே நேரடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், நடப்பதைப் பார்த்துக்கொண்டு ஊமையாகவே இருந்து மடிவோம்.
நம் தலைமுறையை அழித்த பெருமை நம்மை வந்து சேரட்டும்" என்றார் கொந்தளிப்புடன்.

மக்கள் பாதை இயக்கத்தினர்

2010-ம் ஆண்டுக்கு முன் கொள்ளிடம் எப்படி இருந்தது... தற்போது கொள்ளிடம் ஆற்றை மணல் மாஃபியாக்கள் எப்படிக் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்பதை படங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இதற்குக் காரணம் தரமற்ற அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல... அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நாமும்தான்!


டிரெண்டிங் @ விகடன்