`நெல்லை மாவட்டத்தில் 74 சதவிகிதம் கூடுதல் மழைப் பொழிவு!’ - ஆட்சியர் தகவல் | Nellai district gets 70 percent of excess rainfall, says collector

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (24/08/2018)

கடைசி தொடர்பு:22:00 (24/08/2018)

`நெல்லை மாவட்டத்தில் 74 சதவிகிதம் கூடுதல் மழைப் பொழிவு!’ - ஆட்சியர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக இதுவரை 74 சதவிகிதம் கூடுதல் மழைப் பொழிவு இருந்த விவரம் தெரியவந்துள்ளது.

கூடுதல் மழை பொழிவு - ஆட்சியர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளையும் தேவைகளையும் தெரிவித்தனர். அப்போது விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வேளாண்மையை இயந்திரமயமாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட கையேடுகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ``நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை 51.8 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைவிடவும் 30 செ.மீ அதிகமாகும். அதாவது, சராசரியில் 74 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. தற்போது மாவட்டத்திலுள்ள அணைகளில் 73 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12 சதவிகித நீர் மட்டுமே இருந்தது. 

தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள 21 குளங்களில் 3 மாத காலத்துக்குத் தேவையான நீர் இருக்கிறது. 98 குளங்களில் 2 மாத நீர் இருப்பும் 629 குளங்களில் ஒரு மாதத்துக்குத் தேவையான தண்ணீர் இருப்பும் உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கிணறுகளில் சராசரியாக 2 மணி முதல் 3 மணிநேரம் பாசனம் செய்யும் நிலைமை இருக்கிறது. அதனால், மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் கார் பருவ சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

விவசாயிகளுக்கு உதவி

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரையிலும் 13,340 ஹெக்டேர் பரப்பளவில் கார்பருவ பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கார் பருவ நெல் சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள், அனைத்து அரசு வேளாண்மைத் துறை விரிவாக்க மையங்கள், தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையான 12.74 கோடி ரூபாயைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பலனாகக் கடந்த 17-ம் தேதி ரூ.1.08 கோடி நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு தினங்களில் ரூ.1.03 கோடி நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.