`வாகன ஓட்டிகள் கட்டாய ஹெல்மெட்' - திருப்பூர் காவல்துறை தீவிரம்!

ஹெல்மெட்

திருப்பூர் மாவட்டத்தில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

இருசக்கர வாகன பயணத்தின்போது ஏற்படும் பெரும்பாலான விபத்துகளில், ஹெல்மெட் அணியாமல் செல்வதன் விளைவாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன. ஆனால், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள் மீதும், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் நபர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது குறித்து, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதையடுத்து, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள்மீது காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், வாகன விபத்துகளின்மூலம் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் விதமாக, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் என அனைவரும் இனி வரும் காலங்களில் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என திருப்பூர் மாநகரக் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது. அவ்வாறு, நாளைய தினம் முதல் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள்மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இது, பொதுமக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!