வெளியிடப்பட்ட நேரம்: 21:49 (24/08/2018)

கடைசி தொடர்பு:11:58 (25/08/2018)

`கருணாநிதி நினைவேந்தலில் அமித் ஷா பங்கேற்கவில்லை' - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்!

'தி.மு.க தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்கவில்லை' என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

அமித் ஷா

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 7-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, அவர் உடல் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவை அனுசரிக்கும் விதமாகவும், அவரின் சாதனைகளுக்குப் பெருமைசேர்க்கும் விதமாகவும் தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன்படி, கருணாநிதிக்கு முதலில் சென்னையில் திரைத்துறை சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையடுத்து, பத்திரிகையாளர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. தொடர்ந்து கவிஞர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இவை அனைத்திலும் தி.மு.க செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிலையில், சென்னையில் தி.மு.க சார்பில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி, வரும் 30-ம் தேதி நடத்தப்பட உள்ளது. 

இதில் பங்கேற்க, பல்வேறு மாநிலத் தலைவர்களுக்கு தி.மு.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி மற்றும் டெரிக் ஓ பிரையன் எம்.பி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் நடந்துவந்தன. இதற்கிடையே, தி.மு.க விழாவில் பா.ஜ.க பங்கேற்பது குறித்தும் யூகங்கள் கிளம்பின. கூட்டணிக்கு அச்சாரமாகத்தான் இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்கிறார் எனவும் செய்திகள் பரவின. 

ஆனால் தற்போது, 'அமித் ஷா கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை' என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``தி.மு.க கூட்டத்தில் கட்சித் தலைவர் அமித் ஷா பங்கேற்கப்போவதில்லை என்று முடிவுசெய்துள்ளது குறித்து அறிந்ததில் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார். அமித் ஷா பங்கேற்பார் என இன்றுதான் தி.மு.க அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த ட்வீட், தி.மு.க தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுப்ரமணியன் சுவாமி ட்வீட்

நீங்க எப்படி பீல் பண்றீங்க