வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (25/08/2018)

கடைசி தொடர்பு:04:17 (25/08/2018)

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்துங்கள்..! - திருப்பூரில் பொங்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர்

தமிழகத்தில் விரைவாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக முன்வைத்திருக்கிறார்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

சி.பி.எம் போராட்டம்

உயர்த்தப்பட்ட சொத்துவரியை வாபஸ் பெற வேண்டும்; உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். வீட்டுமனை வரைமுறை கட்டணத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தின் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன்," தமிழகத்தில் ஆட்சிசெய்துவரும் எடப்பாடி பழனிசாமியின் அரசு, இங்குள்ள ஏழை எளிய நடுத்தர குடும்ப மக்களுக்குப் பெரும் சிரமத்தை உண்டாக்கிவருகிறது. சொத்து வரியைப் பல மடங்காக உயர்த்தியிருக்கிறார்கள். ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என பலமுறை எங்களது கட்சி சார்பில் கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், ஆளும் அ.தி.மு.க அரசு தேர்தலை நடத்துவதற்கு தொடர்ந்து தயங்கி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத காரணத்தால், கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், மத்திய அரசாங்கத்திடமிருந்து தமிழக உள்ளாட்சி நிர்வாகத்துக்குக் கிடைக்கவேண்டிய ரூபாய் 5,100 கோடியும் கிடைக்காமல் போயுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இழப்பு ஏற்பட்டதுக்குக் காரணம், எடப்பாடி பழனிசாமியின் அரசுதானே தவிர, தமிழக மக்கள் கிடையாது. தேர்தலை நடத்தாமல், மக்கள் பிரதிநிதிகளும் இல்லாமல், அதிகாரிகளை மட்டும் தங்களின் கையில் வைத்துக்கொண்டு தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு வரியை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிப்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எனவே,  தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்பிறகு, தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் முடிவுசெய்யட்டும் வரியை உயர்த்தலாமா.. வேண்டாமா.. என்பதை’’ என்று கூறினார்.