`பணம் வேண்டாம்; கோல்டு காயின்தான் வேண்டும்'- தெறிக்கவிடும் சத்துணவு நேர்முக உதவியாளர்!

கிருஷ்ணகிரி மாவட்ட சத்துணவு திட்டத்தில் மாவட்ட நேர்முக உதவியாளராக இருக்கும் அங்குசாமி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து ஒரே துறையில் அதிகாரியாகப் பணி செய்து வருகிறார். இவர் துறை ஊழியர்களிடம் அடாவடியாக வசூல் செய்வது குறித்து அடுக்கடுக்கான புகார்கள் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து புகார் அனுப்பும் அளவுக்கு கொதித்துப்போய் உள்ளனர். 

சத்துணவுத்துறையில் ஊழல்

என்ன நடந்தது என்று சங்க நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் மாவட்ட நேர்முக உதவியாளராகப் பணியாற்றி வரும் அங்குசாமி, கடந்த மூன்று ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்கள் சாப்பிடும் மதிய சத்துணவு திட்டத்தில் நிர்வாக ரீதியாக மேம்படுத்தியுள்ளாரா என்றால் இல்லை என்பதுதான் எங்கள் பதில். மாறாகத் துறை சார்ந்த ஊழியர்களிடம் எப்படி எல்லாம் கொள்ளை அடிக்க முடியும் என்பதை திட்டம்போட்டு அதிகாரி அங்குசாமியும், அவரது ஓட்டுநர் ராஜேந்திரனும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

புகார் மனு

இதற்காக மாதம்தோறும் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு விசிட் அடித்து மாணவர்களுக்குச் சத்துணவு திட்டத்தின் மூலம் மளிகை பொருள்கள் வாங்கவும், காய்கறி வாங்க ஒதுக்கப்படும் பணத்தில் மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தகுந்தார்போல் ஆயிரம், இரண்டாயிரம் என்று கட்டாய வசூல் செய்து வருகிறார். இப்படி இருந்தால் மாணவர்களுக்கு எப்படி தரமான உணவு வழங்க முடியும். இதுதவிர ஒரு சத்துணவு அமைப்பாளர் பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்தால் 40 ஆயிரம் ரூபாய் இருந்தால் மட்டுமே மாறுதல் பெற முடியும். அதே போல சமையலர் என்றால் 20 ஆயிரம் கொடுக்க வேண்டும். அமைப்பாளருக்கு 7,000, சமையலருக்கு அதிகபட்சம் 4,000 மாதச் சம்பளம். இதற்கே 40 ஆயிரம் லஞ்சம் கொடுத்து மாறுதல் பெற வேண்டிய நிலை உள்ளது. அதுவும் இப்போது எல்லாம் பணமாக வாங்குவதில்லை கோல்டு காயின்தான் வாங்குகின்றார் என்று கதறுகின்றனர் சத்துணவு ஊழியர்கள். 

சத்துணவு ஊழியர் சங்கத்தின் புகார் குறித்து சத்துணவு நேர்முக உதவியாளர் அங்குசாமியிடம் கேட்டதற்கு, ``கடந்த மூன்று வருடங்களாகப் பணியாற்றுவது உண்மைதான். ஆனால், நான் யாரிடமும் எதற்காகவும் லஞ்சம் வாங்கவில்லை'' என மறுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!