வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (25/08/2018)

கடைசி தொடர்பு:11:50 (25/08/2018)

பாத்திரங்களைத் அடமானம் வைக்க வந்த விவசாயிகள்! அதிர்ந்த கலெக்டர் குறைதீர்ப்பு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தின்போது ஆட்சியரிடம் பித்தளைப் பாத்திரங்களை விவசாயிகள் அடமானம் வைக்க வந்ததால் பரபரப்பான சூழல் உருவானது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நேற்று விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம்  நடைபெற்றது. ஒரத்தநாடு அருகில் உள்ள கக்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுகுமாரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பித்தளை குடங்களுடன் ஆட்சியர் அண்ணாதுரையைச் சந்திக்க வந்தனர். இவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள்.

இதுகுறித்து பேசிய கக்கரை சுகுமாரன், ``பாசனத்துக்குத் தண்ணீர் கேட்டு காவிரி டெல்டா விவசாயிகள் போராடியபோது கர்நாடகம் தண்ணீர் தர மறுத்துவிட்டது. அதைப் பெற்றுத்தர தமிழக அரசால் இயலவில்லை. கர்நாடகாவில் தற்போது வெள்ளம் உருவாகியுள்ளதால் தண்ணீர் திறந்துவிட்டுள்ளார்கள். ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும்கூட கடைமடை பகுதிகளுக்குத் தண்ணீர் வரவில்லை. வாய்க்கால்கள் ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதற்குக் காரணமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். இந்த ஆண்டும் சம்பா நெல் சாகுபடி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதால் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வீட்டில் உள்ள பித்தளைப் பாத்திரங்களைத் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அடமானம் வைத்து பணம் வாங்கலாம் என வந்தோம்” எனத் தெரிவித்தார்.