வெளியிடப்பட்ட நேரம்: 12:46 (25/08/2018)

கடைசி தொடர்பு:12:46 (25/08/2018)

மர்ம பங்களாவில் தொடர்ந்த பாலியல் தொல்லை - மாஜிஸ்திரேட்டிடம் கதறிய மாணவிகள்

பாலியல் தொல்லை வழக்கை விசாரிக்கும் ஆவடி மகளிர் காவல் நிலையம்


சென்னை அம்பத்தூர், திருமுல்லைவாயலில் செயல்பட்ட சிறுவர், சிறுமிகள் இல்லத்தில் தங்கியிருந்த மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் அனிதாவிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் கதறி அழுதுள்ளனர்.

சென்னையை அடுத்த அம்பத்தூர், திருமுல்லைவாயல் பகுதியில் 4 ஏக்கர் இடத்தில் சிறுவர், சிறுமிகள் இல்லம் செயல்பட்டு வந்தது. இந்த இல்லம் 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், 2003-ம் ஆண்டில்தான் அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதியுதவி, இந்த இல்லத்துக்கு கிடைத்துள்ளது.  இந்த இல்லத்தை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜேக்கப், விமலா என்ற தம்பதி நடத்திவந்தனர். இங்கு 28 மாணவிகள், 18 மாணவர்கள் தங்கி படித்தனர்.

திருமுல்லைவாயல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு சில நாளுக்கு முன்பு சட்ட விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை அம்பத்தூர் மாஜிஸ்திரேட்கள் அனிதா, சௌந்தர்யா, அருள் சபாபதி மற்றும் குழந்தைகள் நல அலுவலர் செந்தில் ஆகியோர் நடத்தினர். அப்போது, 4 மாணவிகள் மாஜிஸ்திரேட் அனிதாவிடம் தங்களுக்குத் தொடர்ந்து நடந்துவரும் பாலியல் தொல்லைக் குறித்து வெளிப்படையாகக் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த மாஜிஸ்திரேட் அனிதா, உடனடி நடவடிக்கை எடுக்க ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபாராணிக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இல்லத்துக்கு போலீஸ் டீம் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் சென்றனர். அப்போது நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இல்லத்தில் தங்கி படித்துவந்த 14, 13, 12, 11 ஆகிய வயதுடைய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது. அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை கேட்டறிந்தனர் பெண் போலீஸார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``14 வயது மாணவி ஒருவர், 5 வயதில் இந்த இல்லத்தில் சேர்ந்துள்ளார். அவர், தற்போது 8-ம் வகுப்பு படித்துவருகிறார். அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை நடந்துள்ளது. அவரிடம் அங்கு பணியாற்றும் சிலர், அத்துமீறி நடந்துள்ளனர். அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்தால், அன்றைய தினம் அவருக்கு அடி உதையோடு, சாப்பாடும் கொடுக்கப்படுவதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை இல்லத்தின் நிர்வாகிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், யாரும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மாணவியால் அந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்க முடியாமல் சிரமப்பட்டுவந்துள்ளார். 

யாரிடம் புகார் கொடுப்பது என்று அந்த மாணவிக்குத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் அம்பத்தூர் மாஜிஸ்திரேட் அனிதா, மாணவிகளோடு நெருங்கிப் பழகியுள்ளார். அவரிடம், அந்த மாணவி, தனக்கு நடந்த பாலியல் தொல்லையை கூறியுள்ளார். அதைக் கேட்டு மாஜிஸ்திரேட் அனிதா, அதிர்ச்சியடைந்ததோடு நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உத்தரவிட்டார். உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.  இல்லத்தை நடத்திய விமலா, அவரின் கணவர் ஜேக்கப், மாணவிகளின் விடுதி பொறுப்பாளரான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கர், எலெக்ட்ரீசியன் முத்து ஆகிய 4 பேரை கைது செய்துள்ளோம். இதில் பாஸ்கரும் முத்துவும் கடந்த 14 ஆண்டுகளாக அங்கு பணியாற்றிவருகின்றனர். முத்துவுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர், ஒரு மாணவியிடம் தவறாக நடந்துள்ளார். அந்த மாணவியும் முத்து குறித்து முழுமையான தகவலை கூறியுள்ளார். அதுகுறித்து முத்துவிடம் விசாரித்தபோது அவரும் உண்மையை ஒத்துக்கொண்டார். பாஸ்கர், விமலா, ஜேக்கப் ஆகியோருக்கு பாலியல் தொல்லையில் பங்கு உள்ளது. இதனால், 4 பேர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``திருமுல்லைவாயல், சரஸ்வதிநகர், ஜியோன் தெருவில் 4 ஏக்கரில் இந்த இல்லம் அமைந்துள்ளது. உள்ளே பாழடைந்த கட்டடங்களில்தான் இல்லம் செயல்பட்டுள்ளது. சினிமாவில் வரும் மர்ம பங்களா போலத்தான் அந்த இடம் காணப்படுகிறது. இதனால் அங்கு என்ன நடந்தாலும் வெளியில் யாருக்கும் தெரியாது. ஏனெனில் ஒவ்வொரு கட்டடமும் தனித்தனியாக உள்ளது. மாணவிகளை இல்லத்தின் வளாகத்துக்குள் தனியாக அழைத்துச் சென்றுதான் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சம்மதிக்காத மாணவிகள் கடுமையாக டார்ச்சர் செய்யப்பட்டுள்ளனர். குடிபோதையில் மாணவிகளிடம் எல்லை மீறியுள்ளனர். அவர்களில் முக்கியமான நபர் பாபு சாமுவேல். அவர் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகிறோம். அவர் சிக்கினால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும். மாணவிகள், மாணவர்களை அங்கிருந்து மீட்டு வேறு காப்பகத்தில் சேர்த்துள்ளோம்" என்றார்.