வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (25/08/2018)

கடைசி தொடர்பு:16:15 (25/08/2018)

`ஆர்தர் காட்டனின் சாதனையை வேதனையாக்கிவிட்டனர்'- ராமதாஸ்

``பல ஆண்டுகளாக காவிரி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்த ஆண்டு இதுவரை 175 டி.எம்.சி தண்ணீர் கடலுக்குச் சென்றுள்ளது'' என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

ராமதாஸ்

கொள்ளிடம்  காவிரி  ஆற்றின்  குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தி  பா.ம.க தலைவர் ராமதாஸ் தலைமையில் கும்பகோணத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராமதாஸ், ``காவிரி கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதை நம்மைத்  தவிர யார் பேச முடியும். நாம்தான்  உண்மையான எதிர்க்கட்சி. எனது அறிக்கையின் வழியாக நாட்டில்  நடக்கும் குறைகளையும், அதை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகளையும் தெரிவித்து வருகிறேன். அதைச் செய்தால் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும். ஆனால், இவர்கள் அதைக் கேட்க மாட்டார்கள். ஏனெனில் இங்கு நடப்பது பினாமி ஆட்சி. சோழநாடு சோறுடைத்து என்பதெல்லாம் பழம்பெருமையாகிவிட்டது. நாம் தற்போது தண்ணீர் தண்ணீர்  எனக் கதறி வருகிறோம். காவிரி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரை ஏறி இறங்கியுள்ளோம். இந்த நிலையில், கர்நாடகாவில் இயற்கையாக மழை பெய்து தமிழகத்துக்கு தண்ணீர் வெள்ளமாக வருகிறது. ஆனால், கடைமடை வாய்க்கால்களில் தண்ணீர் செல்லவில்லை. அனைத்தும் கடலுக்குச் செல்கிறது.

பல ஆண்டுகளாக தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இந்த ஆண்டு இதுவரை 175 டி.எம்.சி தண்ணீர் கடலுக்குச் சென்றுள்ளது. இதற்கு தமிழக அரசே காரணம். தமிழகத்தில் கரிகாலச் சோழனால் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உலகத்தின்  முதல் அணை கல்லணை. இது தற்போது கம்பீரமாக நின்று ஆச்சர்யப்படுத்தி வருகிறது. தென்னிந்திய பாசனத் திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஆங்கிலேயர் சர் ஆர்தர் காட்டன், அந்தக் காலத்தில் கொள்ளிடத்தில் அதிகமாகவும், காவிரியில் குறைவாகவும் தண்ணீர் செல்வதை விஞ்ஞான ரீதியில் உணர்ந்து முக்கொம்பு அணையைக் கட்டியவர் அவர். கல்லணை உறுதியாக இருக்கும் நிலையில், அதைப் பார்த்து கட்டிய முக்கொம்பு அணை உடைந்ததற்கு காரணம் மணல் அள்ளியதுதான். ஆர்தர் காட்டனின் சாதனையை வேதனையாக்கிவிட்டனர். காரணம் தகுதியில்லாதவர்களை நாம் ஆட்சியில் அமர்த்தியதுதான்.

மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் பாசனத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் எந்த அறிகுறியும் தெரியவில்லை. பாசனத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தமிழகம் 18-வது இடம் வகிக்கிறது. குறைந்த மழைப் பொழியும் இஸ்ரேலில் உள்ள விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.47 லட்சம் வருமானம். தமிழகத்தில் 950 மி.மி. மழை பொழிந்தும், விவசாயியின் வருமானம் கேள்விக்குறியாக உள்ளது. இங்கே விவசாயம் செய்வதற்கான வசதிகளை அரசு செய்து தரவில்லை. ஏனெனில் சினிமாவிலிருந்து வந்த ஆளுங்கட்சியினருக்கும், ஆண்ட கட்சியினருக்கும் விவசாயம் பற்றித் தெரியாது. வேளாண்மைத்துறைக்கு நாங்கள் 11 ஆண்டுகளாக தனி பட்ஜெட் போடுகிறோம். தமிழக அரசின் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட வலியுறுத்தியும்  வருகிறோம். ஆனால், இதைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. ஆனால், தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மதுக் கடைகளை திறந்து குடும்பங்களை சீரழித்து வருகிறது '' எனப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க