ஒரு வருட உண்டியல் சேமிப்பை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளித்த திருப்பூர் சிறுமி!

கேரள மாநில வெள்ளச் சேதங்களை சீரமைக்க உதவும் வகையில், திருப்பூரைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய ஒரு வருட கால உண்டியல் சேமிப்பு பணத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுமி ரிதன்யா

நேற்றைய தினம் மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சொத்து வரி உயர்வு தொடர்பாக  ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அதே சமயம் கேரள மாநில வெள்ள பாதிப்புக்கு பொதுமக்கள் உதவும் வகையில் நிவாரண நிதி வசூலிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிகழ்வில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது திருப்பூர் பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர் தன்னுடைய 5 வயது மகளான ரிதன்யா பாரதியை அந்த கூட்டத்துக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது அந்தக் கட்சியினர் வசூலித்து வந்த வெள்ள நிவாரண நிதிக்கு தன்னுடைய பங்காக, கடந்த ஒரு வருட காலமாக தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை அப்படியே மொத்தமாக வழங்கினார் சிறுமி ரிதன்யா பாரதி. அதைப் பெற்றுக்கொண்ட பாலகிருஷ்ணன், சிறுமியின் ஆர்வத்தை வெகுவாகப் பாராட்டி அவரை வாழ்த்தி மகிழ்ந்தார்.

சிறுமி ரிதன்யா

சிறுமியின் தந்தை அர்ஜுனனிடம் பேசினோம். ``பள்ளியில் யூ.கே.ஜி படித்து வரும் என் மகளுக்கு உண்டியலில் பணம் சேமிப்பது மிகவும் பிடித்த ஒன்று. இப்படி வருடம் முழுவதும் பணத்தை சேமித்து வைத்து, ஆண்டுதோறும் திருப்பூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் தனக்குப் பிடித்த புத்தகங்களை அவள் வாங்கிகொள்வாள். இந்த ஆண்டும் அதற்காகத்தான் உண்டியலில் பணம் சேர்த்துக்கொண்டு இருந்தாள். இந்நிலையில் கேரளா வெள்ள பாதிப்பு தொடர்பாக டி.வி சேனலில் வரும் காட்சிகளைப் பார்த்தவள், மற்றவர்களைப் போல நாமும் ஏதாவது உதவ வேண்டும் அப்பா என்று விரும்பினாள். நான் நிவாரண நிதியாக 3,000 ரூபாயை தரப்போகிறேன் என்று சொன்னேன். அதைக்கேட்டுவிட்டு என் மகளும் பணம் தருவதாகக்கூறி தன்னுடைய உண்டியலை எடுத்து என்னிடம் நீட்டினாள். அந்த உண்டியலில் எத்தனை ரூபாய் இருக்கிறதென்று எனக்கும் தெரியாது, என் மகளுக்கும் தெரியாது. உண்டியலை உடைக்காமல் அப்படியே கொண்டு வந்து நிவாரண நிதி வசூலிக்கும் தோழர்களிடம் ஒப்படைத்துவிட்டோம்'' என்றார்.

சிறுமியின் இந்தச் செயல் அங்கு கூடியிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மனிதநேய சிறுமிக்கு ரெட் சல்யூட்..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!