வரலட்சுமி பூஜையின்போது டி.ஐ.ஜி-க்கு அதிர்ச்சிக் கொடுத்த இளம்பெண்!

போலீஸ் டிஐஜி வீட்டில் திருட்டு

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் குடியிருக்கும் விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஐ.ஜி வீட்டில் தங்க நகைகளைத் திருடிய இளம்பெண் மற்றும் அவரின் கூட்டாளியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை வி.ஜி.என் சாந்திநகர், தேவதாஸ் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர், போலீஸ் டி.ஐ.ஜியாக பணியாற்றி கடந்த 2007-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றவர். இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், வரலட்சுமி பூஜைக்காக வீட்டில் பீரோவில் உள்ள நகைகளை எடுத்தபோது 30 சவரன் நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது. இதைக் கண்டுபிடித்து தரும்படி குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் கிருஷ்ணசாமியின் வீட்டில் வேலை செய்த லலிதா என்ற பெண் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது நகைகளைத் திருடியதை அவர் ஒத்துக்கொண்டார். திருடிய நகைகளை தனக்குத் தெரிந்த விவேகானந்தனிடம் கொடுத்திருப்பதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து, விவேகானந்தனிடமிருந்து 20 சவரன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கிருஷ்ணசாமி வீட்டில் கடந்த ஜூலை மாதம், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த லலிதா என்ற 26 வயது இளம்பெண், வீட்டு வேலைக்காகச் சேர்ந்துள்ளார். அவர், கிருஷ்ணசாமி வீட்டின் பீரோவில் நகைகளை வைத்திருப்பதைப் பார்த்துள்ளார். ஆளில்லாத நேரத்தில் பீரோவைத் திறந்து 30 சவரன் நகைகளைத் திருடியுள்ளார். பிறகு அந்த நகைகளை விவேகானந்தனிடம் கொடுத்துள்ளார். விவேகானந்தன், ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் சலவை இயந்திர எலெக்ட்ரீசனாக வேலை செய்கிறார். இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளோம்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!