`என்னை எப்படி நீ படம் எடுக்கலாம்' - ஈ.சி.ஆர் சாலையில் காவலரை கலங்கடித்த வியாபாரி

  சென்னை போலீஸ்

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் தடுப்புகளைத் தாண்டி காரில் வந்த நபரிடம் காவலர் விசாரித்தார். அப்போது, காவலரின் செல்போனை பிடுங்கி உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நித்தின்குமார். இவர், இனிப்பு பொருள்களைக் கடைகளுக்கு சப்ளை செய்துவருகிறார். இந்த நிலையில் நேற்று இவர், கானத்தூரிலிருந்து திருவான்மியூருக்கு காரில் வந்தார். அக்கரை செக்போஸ்ட் அருகே போக்குவரத்தை போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி திருப்பிவிட்டிருந்தனர். அந்தப்பகுதியில் போலீஸார் இல்லாததால் காரை விட்டு கீழே இறங்கிய நித்தின்குமார், தடுப்புகளை அகற்றினார். பிறகு போக்குவரத்து விதிமுறைகளை மீறி அவ்வழியாகச் சென்றார். அப்போது, செக் போஸ்ட் பகுதியில் பணியிலிருந்த நீலாங்கரை போலீஸ் நிலைய காவலர் கிருஷ்ணன், அங்கு வந்தார். காரை மடக்கிய அவர், நித்தின்குமாரிடம் போலீஸ் தோரணையில் விசாரித்தார். 

போதையிலிருந்த நித்தின்குமார், காவலரிடம் `என்னுடைய காரை நீ எப்படி வழிமறிக்கலாம்' என்று தகராறு செய்தார். அதோடு தகாத வார்த்தைகளால் திட்டினார். இதை, கிருஷ்ணன், தன்னுடைய செல்போனில் படம் பிடித்தார். இதில் ஆத்திரமடைந்த நித்தின்குமார், `என்னை எப்படி நீ படம் எடுக்கலாம்' என்று கூறிக்கொண்டே கிருஷ்ணனின் கையிலிருந்த செல்போனை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்தார். அதில் செல்போன் துண்டு, துண்டானது. இதனால் காவலர் கிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். உடனே நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீஸார் நித்தின்குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் போதையில் இருந்ததால் எந்த தகவலையும் பெற முடியவில்லை. போதை தெளிந்தபிறகு நித்தின்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். அவரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 

காவலரின் செல்போன் நடுரோட்டில் உடைக்கப்பட்ட சம்பவம் போலீஸாரிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!