`தொகுதிக்குள்ள என் பெயர் போடாம எப்படி நடத்துவீங்க!’ - அரசு நிகழ்ச்சியில் பொங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ

அரசு நிகழ்ச்சியில் பொங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ

திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பு உணர்வு பிரசாரம்  நடைபெற்றது. இதில் தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

விழாவை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்ததோடு, செய்தியாளர்களுக்கும் அவரே பேட்டி கொடுத்திருந்தார். இந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் அதிகாரிகள் தனக்கு முறையாக மரியாதை வழங்கவில்லை என்றும், குறிப்பாக நிகழ்ச்சி தொடர்பாக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் தன்னுடைய பெயர் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் புலம்பி தீர்த்தார்.

அங்கிருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை அழைத்த எம்.எல்.ஏ குணசேகரன், ``என்னோட தொகுதிக்குள் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் எனக்கு என்ன மரியாதை குடுத்தீங்க. பிளக்ஸ் பேனரில் என்னோட பெயரைப் போடாம எப்படி நீங்க நிகழ்ச்சி நடத்தலாம். வேண்டுமென்றே என்னோட பெயரை  போடாம விட்டுருக்கீங்க’’ என பொங்கித் தீர்த்துவிட்டார் குணசேகரன். பின்னர் அவரை சமாதானப்படுத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன், உடனே பி.ஆர்.ஓவை அழைத்து,``இனி எது பண்ணாலும் பிளக்ஸ் அடிக்கும்போது எங்ககிட்ட காமிச்சிட்டு பண்ணுங்க. நீங்களா ஏதும் பண்ணாதீங்க’’ என்று கூறிவிட்டு நகர்ந்தார். எம்.எல்.ஏ-வின் புலம்பலால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!