``பாலம் கட்டுவீங்களா.. மாட்டீங்களா?" - ரயில்வே கேட்டுடன் மல்லுக்கட்டும் வாணியம்பாடி மக்கள்! | Vaniyambadi people worried about railway gate bridge construction

வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (25/08/2018)

கடைசி தொடர்பு:18:31 (25/08/2018)

``பாலம் கட்டுவீங்களா.. மாட்டீங்களா?" - ரயில்வே கேட்டுடன் மல்லுக்கட்டும் வாணியம்பாடி மக்கள்!

பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் புத்தக மூட்டையுடன் பூட்டப்பட்டிருக்கும் ரயில்வே கேட்டில் குனிந்து செல்வார்கள். வியாபாரத்துக்குச் செல்பவர்கள் தங்கள் சைக்கிள், டூ-வீலர்களை சாய்வாகப் படுக்கப்போட்டு இருபக்கமும் ரயில் வருகிறதா எனப் பார்த்து திகிலுடன் ரயில்வே கேட்டை கடக்கிறார்கள். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாடுதான் கொடுமையிலும் கொடுமை.

``பாலம் கட்டுவீங்களா.. மாட்டீங்களா?

வாணியம்பாடி பேருந்து  நிலையத்திலிருந்து ஆலங்காயம், செக்குமேடு, பள்ளிப்பட்டு, நிம்மியம்பட்டு ஆகிய பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள் செல்லும்போது இடையே குறுக்கிடும் ரயில்வே கேட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். அப்போது ரயில் வந்தால் கேட் பூட்டப்பட்டு சிறிது நேரம் காத்திருப்புக்குப் பின்னரே வாகனங்கள் செல்ல வேண்டியச் சூழல் இருந்து வந்தது. இதுபோல பல வருடங்களாகப் பேருந்துகள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள், தனியார் நிறுவன வாகனங்கள் இவ்வழியே இயங்கி வந்திருக்கின்றன.

இதற்கிடையில், அவ்வப்போது ரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டு நின்றுவிடுவது வழக்கமாகிப்போனது. காலை - மாலை என முக்கியமான வேளைகளில்கூட ரயில்வே கேட் இப்படி 'தகராறு' செய்யத் தொடங்கியது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகனங்கள் ஆலங்காயம், நிம்மியம்பட்டு பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் கிட்டதட்ட ஆறு கிலோ மீட்டருக்கு மேல் சுற்றித்தான் செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரி, தனிப்பட்ட வேலைகள் எனப் பரபரப்பாக செல்லும் மாணவ - மாணவிகளும், பொதுமக்களும் இதனால் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.

ஒருநாள் திடீரென்று ரயில்வே கேட் முழுவதுமாக ரிப்பேர் ஆகி பூட்டப்பட்டது. ஆனால், ரயில்வே கேட்டை கடப்பதற்கு விரைவிலேயே பாலம் கட்டப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால், இன்று வரை அதற்கான பணிகள் முடுக்கிவிடப்படவில்லை. பாலம் அமைப்பதாகக்  கூறி கேட்டுக்கு அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் பெரிய பள்ளம் ஒன்றைத் தோண்டியுள்ளதால் மழைக் காலங்களில் இந்தப் பள்ளம் நீரால் நிரம்பி குளமாகக் காட்சி தருகின்றன. இதனால் பள்ளம் எது, மேடு எது எனத் தெரியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

வாணியம்பாடி ரயில்வே கேட் பாலம்

அப்பகுதியைச் சேர்ந்த சிறுபான்மையினர் காங்கிரஸ் தலைவர் அஸ்லாம் பாஷா இந்த ரயில்வே கேட் விவகாரம் தொடர்பாக ஒருமுறை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். அதன் பிறகு அனைத்துக் கட்சிக்காரர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த அரசு அதிகாரிகள், 'பாலம் சம்பந்தமான பணிகள் பற்றி விரைவில் நடவடிக்கை எடுக்கிறோம்' என்று உறுதியளித்ததும் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டனர்.

சுமார்  ஒன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று வரை அங்கு எதுவும் மாறிவிடவில்லை. பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் புத்தக மூட்டையுடன் பூட்டப்பட்டிருக்கும் ரயில்வே கேட்டில் குனிந்து செல்வார்கள். வியாபாரத்துக்குச் செல்பவர்கள் தங்கள் சைக்கிள், டூ-வீலர்களை சாய்வாகப் படுக்கப்போட்டு இருபக்கமும் ரயில் வருகிறதா எனப் பார்த்து திகிலுடன் ரயில்வே கேட்டை கடக்கிறார்கள். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாடுதான் கொடுமையிலும் கொடுமை. ஆனால், பாலத்துக்கு வாக்குறுதி கொடுத்தவர்கள் கண்ணுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. இந்நாள் வரையிலும் பாலம் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் யாரையோ காவு வாங்க வானத்தைப் பார்த்து பல்இளித்தபடி படுத்திருக்கின்றன. விட்டுப்போன பணிகள் எதுவும் தொடரவில்லை.

அவஸ்தைக்குள்ளாகி வரும் மக்கள் புலம்புவது ஒரே விஷயத்தைப் பற்றித்தான், ``ரயில்வே கேட் இருக்கும்போதாச்சு பரவால்ல. கொஞ்ச நேரம் காத்திருந்தா கேட்ட தொறந்து விட்டுடுவாங்க. ஆனா, பாலம் கட்டுறேன்னு சொல்லி பள்ளம் தோண்டிட்டு இப்படி பண்ணிட்டாங்களே!" என்கின்றனர்.

வாணியம்பாடி ரயில்வே கேட் பாலம்

மூன்று முறை பூஜை போடப்பட்டும் ரயில்வே பாலம் அமைக்காததைக் கண்டித்து கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டத்தைக் கண்ட அரசு அதிகாரிகள் தாசில்தார், காவல்துறை எஸ்.பி, ரயில்வே அதிகாரிகள் பலரும் ஒன்று சேர்ந்து 'ரயில்வே பாலம் இன்னும் சில நாள்களில் ஆரம்பிக்கப்படும். தயவு செய்து போராட்டத்தைக் கைவிடுங்கள்' எனக் கேட்டுக்கொண்டதால் போராட்டமும் கைவிடப்பட்டது.

அஸ்லாம் பாஷாஆனால், அதன் பிறகு என்னவானது எனக் கட்டுரையின் இந்தப் பத்தியில் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய அஸ்லாம் பாஷாவிடம் பேசியபோது, ``பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதை அறிந்ததும் மீண்டும் அதிகாரிகளைத் தொடர்புகொண்டேன். அப்போது பேசிய அதிகாரி ஒருவர், 'பணிகளை ஆரம்பிக்க ரயில்வே அதிகாரியை அணுக வேண்டும்' என்றார். அந்த அதிகாரியை அணுகினால், 'பாலம் அமைக்க முதலில் அங்குள்ள தண்ணீரை வேறு திசைக்குத் திருப்பிவிட வேண்டும். அதற்கு நகராட்சியிடம் அனுமதி வாங்க வேண்டும்' என்றார். நகராட்சி நிர்வாகத்திடம் சென்றால், 'தண்ணீரை வேறு திசைக்குத் திருப்பி விட்டோம். இனி பொதுத்துறை நிர்வாகம்தான் அதைச் சரி செய்ய வேண்டும்' என்றனர். இப்படி ஒருவர், ஒருவராகக் கூறி இறுதி வரை முழுமையானத் தகவலும் கிடைக்கவில்லை.. பாலமும் முடங்கி நிற்கிறது. மீண்டும் கடந்த 15 நாள்களுக்கு முன்பு, 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' மூலம் 'ரயில்வே பாலம் அமைக்காததற்குக் காரணம் என்ன.. எதனால் இன்னும் பணிகள் நடக்கவில்லை' என்பதைப் பற்றி கேட்டிருக்கிறேன். உரிய பதில் வந்ததும் வாணியம்பாடியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்" என விவரித்தார் அஸ்லாம் பாஷா.

இது தொடர்பாக வாணியம்பாடி நகராட்சியிடம் கருத்து கேட்பதற்குத் தொடர்புகொண்டபோது உரிய பதில் இல்லை. இதைத் தொடர்ந்து வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபிலைத் தொடர்புகொண்டோம். மீட்டிங் ஒன்றில் இருப்பதாக அவரின் உதவியாளர் கூறினார். மீண்டும் சிலமுறை தொடர்புகொண்டபோது அழைப்பு ஏற்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் தந்தால் பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கத் தயார்.


டிரெண்டிங் @ விகடன்