ஆசியக் கோப்பையில் பதக்கம் வென்ற பிரஜ்னேஷூக்கு ரூ.20 லட்சம் ஊக்கத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு.

பிரஜ்னேஷ்

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 569 வீரர்கள் 36 விதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். புள்ளிபட்டியலில் 9-வது இடத்தைப் பெற்று இந்திய வீரர்கள் சாதித்து வருகின்றனர். குறிப்பாக 6-வது நாளான நேற்று இந்திய டென்னிஸ் வீரர்கள் கோலோச்சினர். ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - டி விஜ் சரண் ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் - டெனிஸ் எவஸ்வ் ஜோடியை வீழ்த்தி தங்களின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றனர். இருவரும் சிறப்பாக ஆடியதுடன் 52 நிமிடங்களில் ஆட்டத்தைக் கைப்பற்றினர். இதேபோல் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 2-6, 2-6 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினிடம் தோல்வியுற்றார். இதனால் இவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மேலும், மகளிர் ஒற்றையர் பிரிவில் இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா வெண்கலம் வென்றார்.

இதற்கிடையே வெண்கலம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு ஊக்கத் தொகையாக ரூ.20 லட்சம் அறிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர், `வருங்காலத்திலும் இதுபோன்று தமிழகத்தின் சார்பிலும், இந்தியா சார்பிலும் பதக்கம் வென்று பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரஜ்னேஷுக்கு பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!