காவிரி தண்ணீரை கடைமடைக்கு திறந்துவிடக்கோரி தீவிரமடையும் நாகுடி விவசாயிகள் போராட்டம்! | Delta district Farmers staged protest over Cauvery water

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (25/08/2018)

கடைசி தொடர்பு:20:20 (25/08/2018)

காவிரி தண்ணீரை கடைமடைக்கு திறந்துவிடக்கோரி தீவிரமடையும் நாகுடி விவசாயிகள் போராட்டம்!

கடலில் கலக்கும் தண்ணீரை எங்கள் பகுதிக்கு திறந்து விடுங்க என்கிறார்கள் அறந்தாங்கி பகுதி விவசாயிகள்.
 
நாகுடி விவசாயிகள்
 
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவையும் அடைந்ததால், அளவுக்கு அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் விடப்படும் அளவுக்கு அதிகமான தண்ணீரில் கொள்ளிடம் பழைய பாலம், திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணை என மிக முக்கியமான அணைகள், பாலங்கள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் உடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.
விவசாயிகள்
கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் அந்த தண்ணீரை கடைமடை டெல்டா பாசன விவசாயிகளுக்கு மடைமாற்றிவிட்டால் தங்கள் பகுதியை விவசாயம் காப்பாற்றப்படும் என புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதி விவசாயிகள் கடந்த 5 நாள்களாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட மேற்பனைக்காடு, நாகுடி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள், காவிரி கடைமடை பாசனத்தில் விவசாயத்தையே நம்பி உள்ளன. கடந்த ஜூலை மாதம் மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த பகுதிக்கு இதுவரை முறையாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதுவரை கொள்ளிடத்தில் 30 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
 
`இந்தத் தண்ணீரில் கால் வாசி தண்ணீர் தங்கள் பகுதிக்கு திறந்துவிட்டு இருந்தால் அந்த பகுதியில் உள்ள பாசன ஏரி, குளங்கள் நிரம்பி விவசாயத்திற்குப் பயன்பட்டிருக்கும். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை செய்ய மறுப்பது மிகவும் வருத்தமாக உள்ளது’ என்கிறார்கள் விவசாயிகள். தங்கள் பகுதிக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி, கடந்த 30 நாள்களுக்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்த இப்பகுதி விவசாயிகள், தங்கள் பகுதியில் விவசாயத்தைக் காப்பாற்றவும் காவிரியில் தண்ணீர் வந்தவுடன் தங்கள் வயலில் பாத்தி கட்டி நாற்றங்கால் வந்துவிட்டதாகவும் அதனை காப்பாற்றுவதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இதனை மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள நாகுடி கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நாகுடி கிராமத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200 விவசாயிகள் திரண்டு கடந்த 22ஆம் தேதி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினார்.
 
பெண்கள்
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு அப்பகுதி மக்கள் அதிக அளவில் ஆதரவு தர திரண்டு வந்தனர். இதையடுத்து, போராட்டத்தில் பங்குபெற வருகைதரும் பொதுமக்களை வரவேற்று அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நெடுவாசலில் வழங்கியதைப் போன்று குடிமக்கள் உணவு சமைத்து விவசாயிகள் பரிமாறி வருகிறார்கள். இன்று கல்லூரி பள்ளிகள் விடுமுறை என்பதால் போராட்டக் களத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் திரண்டு வந்தார்கள்.
 
போராட்டக் களத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் மற்றும் கடந்த சில நாள்களுக்கு முன்பு முத்தரசன் ஆகியோர் நேரில் வந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.  போராடும் விவசாயிகள், `புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனால் அந்தத் திட்டம் தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
ஆனால், இப்பகுதியின் விவசாயத்தை அழிக்க நினைக்கும் அரசு, தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது’’ என போராட்டக் களத்தில் முழங்கி வருகிறார்கள். நெடுவாசல் போன்று நாகுடி பகுதி விவசாயிகள் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு வலுத்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டம் மீண்டும் பரபரப்பாகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க