வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (25/08/2018)

கடைசி தொடர்பு:18:59 (25/08/2018)

`ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவேன்!’ - ஐ.டி இளம்பெண்ணை மிரட்டிய டான்ஸர்

ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய விக்னேஸ்வர்

 `பணம், நகைகளை திரும்பக் கேட்டால் உன்னுடைய ஆபாச படம், வீடியோவை வெளியிட்டு விடுவேன்' என்று ஐ.டி துறையில் பணியாற்றும் இளம்பெண்ணை டான்ஸர் மிரட்டியுள்ளார். 


சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் எம்.எஸ்சி படித்த 23 வயது இளம்பெண் ஒருவர் பணியாற்றுகிறார். இவரின் சொந்த ஊர் கோயமுத்தூர்.  இவருக்கும் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வர் என்பவரும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 25 வயதாகும் விக்னேஸ்வர், டான்ஸராக உள்ளார். இளம்பெண், அக்கா வீட்டில் தங்கியிருந்துள்ளார். இவர்களின் ஃபேஸ்புக் நட்பு, காதலாக மலர்ந்துள்ளது. 

இந்த நிலையில் விக்னேஸ்வர், இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நெருங்கிப் பழகியுள்ளார். மேலும், சினிமாவில் பெரிய டானஸராக, பணம் தேவைப்படுகிறது என்று கூறி இளம்பெண்ணிடமிருந்து குறிப்பிட்ட தொகையை வாங்கியுள்ளார். பணத்தைத்தவிர 25 சவரன் நகைகளையும் வாங்கியுள்ளார். பணம், நகைகளை வாங்கியப்பிறகு இளம்பெண்ணை திருமணம் செய்யவில்லை. 

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, விக்னேஸ்வர்,  `உன்னுடைய ஆபாச படம், வீடியோ என்னிடம் இருக்கிறது. அதை வெளியிட்டு விடுவேன்' என்று இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் இளம் பெண் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விக்னேஸ்வரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``விக்னேஸ்வர், பத்தாம் வகுப்புக்கூட தேர்ச்சி பெறவில்லை. ஆனால், இளம்பெண், எம்.எஸ்சி படித்துவிட்டு ஐடி கம்பெனியில் கைநிறைய சம்பளம் வாங்குகிறார். விக்னேஸ்வர், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் விதவிதமான போட்டோக்களைப் பதிவு செய்துள்ளார். அதோடு, சினிமா துறையில் டான்ஸராக இருப்பதாகவும் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். அதை நம்பிதான் இளம்பெண், விக்னேஸ்வரிடம் நெருங்கிப்பழகியுள்ளார். அதை அவருக்கே தெரியாமல் வீடியோவாக எடுத்த விக்னேஸ்வர், இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். ஏற்கெனவே திருமணம் செய்துகொள்வதாக  ஆசைவார்த்தைக் கூறிய விக்னேஸ்வர், இளம்பெண்ணிடமிருந்து 2.5 லட்சம் ரூபாய், 25 சவரன் நகைகளை வாங்கி ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்ய மறுத்ததால் பணம், நகைகளை திரும்பக் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இளம்பெண்ணிடமும் விக்னேஸ்வர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்திவருகிறோம். விசாரணைக்குப் பிறகே விக்னேஸ்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.