அழகிரியின் அமைதி ஊர்வலம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த வைகோ!

நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோ, தி.மு.க-வுக்கு எதிராக அழகிரி நடத்த இருக்கும் அமைதி ஊர்வலம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

ம.தி.மு.க நிதியளிப்பு கூட்டம்

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க சார்பாக கழக நிதியளிப்பு கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், 4 மாவட்டங்களிலும் கட்சியின் சார்பாக திரட்டப்பட்ட 25 லட்ச ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகிகள் வைகோவிடம் வழங்கினார்கள்.

பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு பேரழிவு ஏற்பட்டுள்ளது. பேரழிவில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழக மக்கள் அளித்துவரும் உதவி மனிதநேயத்தைக் காட்டுகிறது. ம.தி.மு.க சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகிறது. திருச்சி முக்கொம்பு மேலணையில் ஒன்பது மதகுகள் உடைந்தது வேதனை அளிக்கிறது. 

தற்போது அனைத்து மதகுகளும் உடைந்து விடுமோ என்கிற அச்சம் நிலவுகிறது. அனைத்து அணைகளின் பராமரிப்பு முறையாக செய்யப்படவேண்டும். மணல் கொள்ளை மிகப் பெரிய ஆபத்து என்பது மறுக்க முடியாதது. மதகுகள் உடைந்த நிலையிலும் மணல் அள்ளுவது தொடர்ந்து நடக்கிறது. இத்தகைய மணல் கொள்ளை வேதனை அளிப்பதாக உள்ளது. கட்டுமானத்தில் ஊழல், டெண்டர் விடுவதில் ஊழல் ஆகியவற்றின் காரணமாகவே அணைகள் உடைகின்றன. அரசும் பொறியாளர்களும் ஒப்பந்ததாரர்களும் தங்கள் பொறுப்புஉணர்வை நினைத்து செயலாற்ற வேண்டும்.

வைகோ பேட்டி

பழுதடைந்த இடத்தில் 410 கோடி ரூபாயில் புதிய அணை அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அப்போதிருந்த முதலமைச்சர் இதேபோன்ற வாக்குறுதியை அளித்தார். ஆனால் அத்தகைய அறிவிப்புகள் அனைத்தும் தற்போது வரையிலும் அறிவிப்புகளாகவே இருக்கின்றன. கேரளாவில் ஏராளமான ஆறுகள் இருந்த நிலையிலும் அங்கு ஒரு கைப்பிடி மணல் கூட அள்ளப்படுவதில்லை. அங்குள்ள மக்களும் அதற்கு அனுமதிப்பதில்லை. தமிழக மக்களும் பொறுப்பை உணர்ந்து அத்தகைய நிலைக்கு வரவேண்டும். 

கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட தமிழகமே காரணம் என்று கேரள அரசு தெரிவிப்பது சரியல்ல.  முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது ஊழல் புகார்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் கூறியிருப்பதற்குக் காரணம், மக்களின் உணர்வை அவர் பிரதிபலித்துள்ளார்’’ என்றார். தி.மு.க-வையும் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வரும் மு.க.அழகிரி, சென்னையில் அமைதி ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து வைகோவிடம் கேட்டதற்கு எந்த பதிலையும் அளிக்க மறுத்துவிட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!