மாணவர்கள் இடையேயான சாதி மோதலைத் தடுக்க புகார் பெட்டி - நெல்லை எஸ்.பி தகவல்!

நெல்லையில் மாணவர்களுக்கு இடையே நடக்கும் சாதி மோதல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை சார்பாக புகார் பெட்டி வைப்பதுடன் கல்வி அலுவலர்களோடு இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் தெரிவித்தார். 

புகார் பெட்டி - எஸ்.பி தகவல்

நெல்லை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அருண்சக்திகுமார் இந்த முகாமைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ’’மாவட்ட காவல்துறையும், அப்போலோ மருத்துவமனையும் இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்துகிறோம். இதில், 12 விதமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

காவலர்கள், காவலர்களின் குடும்பத்தினர்கள் இதில் கலந்து கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். பணிப்பளுவுடன் செயல்பட்டு வரக்கூடிய காவலர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காக இத்தகைய மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதே போன்ற மருத்துவ முகாம்கள் அடிக்கடி நடத்தப்படும். 

நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் சாதிய மோதல்களை தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் காவல்துறையினரைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி பள்ளிகளுக்கு சென்று காவலர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அத்துடன் பள்ளி, கல்லூரிகளில் காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 89 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். மணல் கடத்தலைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!