வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (26/08/2018)

கடைசி தொடர்பு:00:30 (26/08/2018)

புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்தல் - ராமநாதபுரத்தில் வாலிபர் கைது

 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மங்கலம் விலக்கு சாலையில் 250 போலி மது பாட்டில்களுடன் சிக்கிய   தூத்துக்குடி வாலிபரை மதுவிலக்குப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மங்கலம் விலக்கு சாலையில் 250 போலி மது பாட்டில்களுடன் சிக்கிய தூத்துக்குடி வாலிபரை மதுவிலக்கு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி மது பாட்டில்களுடன் தூத்துக்குடி வாலிபர் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளன. இதனால் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நகர, கிராமப் பகுதிகளில் மதுபானம் வாங்க முடியாமல் மதுபான பிரியர்கள் தவித்து வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட சிலர் டாஸ்மாக் கடைகள் உள்ள இடங்களில் இருந்து மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து கள்ளத்தனமாக விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இதனைத் தடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கள்ளத்தனமாக மது விற்பதை கண்டு கொள்ளாமல் இருக்க மது விலக்கு கூடுதல் கண்காணிப்பாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இருவர் கடந்த வாரம் பணத்துடன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் ஹரிபிரசாத்(35) என்பவர் புதுச்சேரியில் மதுபாட்டில்களைக் குறைந்த விலைக்கு வாங்கி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்துள்ளார்.

இன்றும் பாண்டிச்சேரியில் இருந்து விற்பனைக்காக 250 மதுபாட்டில்களைக் காரில் கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி வெள்ளைத்துரைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மங்கலம் விலக்கு சாலையில் காரை வழிமறித்து போலீஸார் சோதனை செய்த போது அதில் புதுச்சேரியைச் சேர்ந்த 250 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. மதுபாட்டில்கள் 250 -யும் பறிமுதல் செய்ததுடன் அதற்காக அவர் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக கமுதி மதுவிலக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடியைச் சேர்ந்த ஹரிபிரசாத்தைக்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.