புழல் சிறைக்குள் வளர்மதி - 3வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்!

கோரிக்கைகளை முன்வைத்து சென்னை புழல் சிறையில் வளர்மதி 3 வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக, குடியுரிமை பாதுகாப்பு நடுவம் என்ற அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

வளர்மதி

கேரள வெள்ள நிவாரணத்துக்காக சென்னையில் நிதி வசூலில் ஈடுபட்டபோது வளர்மதி தரப்பினருக்கும்  காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த 23 ஆம் தேதி வளர்மதி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் வளர்மதி சிறைக்குள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தினர் விடுத்துள்ள அறிக்கையில், "கேரள மக்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதை தடுக்கும் தமிழக உளவுப்பிரிவை கண்டித்தும், தன்னை  வக்கிரமாக புகைப்படம் எடுத்து, தரக்குறைவாக பேசி, மார்பகத்தை பிடித்து தள்ளிய உளவுப்பிரிவு காவலர் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து  பணி நீக்கம் செய்ய வேண்டும், தனக்கு  நடந்த அநீதிக்கு எதிராக குரல்கொடுத்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தி, சக தோழர்களான அருந்தமிழனை தாக்கி, ஷாஜன் கவிதாவின் கைப்பேசியை உடைத்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்,  தன்னை சிறைக்கு கொண்டு செல்லும்போது தாக்கிய ஆய்வாளர் சிவராஜன், காவலர்கள் சதீஸ், கீதா மற்றும் வேதநாயகி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வளர்மதி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 3 வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொள்வதால் வளர்மதிக்கு ரத்த அழுத்தம் குறைந்து வருகிறது. கோரிக்கைகள் நிறைவேறாமல் உண்ணாவிரத்தை கைவிடப்போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார்" என்று குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தினர் கூறியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!