வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (26/08/2018)

கடைசி தொடர்பு:07:30 (26/08/2018)

கால்டுவெல் குறித்து வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம் - ஆரத்தழுவிய வைகோ!

கால்டுவெல் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றும் விழா, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

வைகோ

தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிஞர் வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து வருகிறார். இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், செயங்கொண்டார், கம்பர், அப்பர், ஆண்டாள், திருமூலர், வள்ளலார், உ.வே.சாமிநாதையர், பாரதியார், பாரதிதாசன், கருணாநிதி, மறைமலையடிகள், புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன் என்று 18 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார். 19ஆம் படைப்பாகக் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ கண்ட கால்டுவெல் பற்றி ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதி திருநெல்வேலி பாளைங்கோட்டையில் நூற்றாண்டு மண்டபத்தில்  அரங்கேற்றினார் கவிப்பேரரசு வைரமுத்து.

இந்த விழாவுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது தமிழின் பெருமைகளையும், திராவிடர்களின் பண்பாட்டையும், கால்டுவெல்லை பற்றியும் அவர் பேசினார். இதையடுத்து பேசிய வைரமுத்து, `இந்த கட்டுரை சற்று கணமானது, இலக்கியத்தை விட இலக்கணத்தையே இது  அதிகம் பேசும்' என்றார். மேலும்,  கால்டுவெல் தமிழகத்திற்கு வந்த கதை, தமிழை அவர் கற்றுத் தேர்ந்தமை, திருநெல்வேலிக்கு கால்டுவெல் வந்தமை, தமிழ் மொழியை ஆராய்ந்து சமஸ்கிருதத்தை விட தமிழ் எவ்வாறு மேன்மை பெற்றது, தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளுக்கு தமிழ் சொற்கள் எப்படி வேராக அமைந்தது, உள்ளிட்டவை குறித்து உரையாற்றினார் வைரமுத்து. நிகழ்வின் முடிவில் வைரமுத்துவை வைகோ ஆரத்தழுவியது முத்தாய்ப்பாக அமைந்தது. இந்த விழாவில் மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.