நிவாரணம் வழங்கச் சென்ற சீமான் - தடுத்து நிறுத்திய கேரள பா.ஜ.க? | seeman arrested in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 08:03 (26/08/2018)

கடைசி தொடர்பு:08:13 (26/08/2018)

நிவாரணம் வழங்கச் சென்ற சீமான் - தடுத்து நிறுத்திய கேரள பா.ஜ.க?

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிவிட்டு தமிழகம் திரும்பும் வழியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அம்மாநில போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். பிரபாகரன் படம் வாகனத்தில் ஒட்டப்பட்டதைக் காரணமாக கூறி பாஜக எதிர்த்ததால் இந்த கைது நடந்தது என நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

சீமான்

பெருமழை, வெள்ளத்தால் அண்டை மாநிலமான கேரளம் மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு இடங்களில் உள்ள மக்களின் வீடுகள் பாதிப்படைந்துள்ளது. மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்தவகையில், நேற்று மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் விதமாக நிவாரணப் பொருட்களுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரது கட்சியினர் கேரள மாநிலம் கோட்டயம் சென்றுள்ளனர்.

கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்குச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கினார்கள். நிவாரணப் பொருட்கள் வழங்கிவிட்டு தமிழகம் திரும்பும் வழியில் சீமான் உட்படக் கட்சியினரை தடுத்து நிறுத்திய கோட்டயம் போலீஸார் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணைக்குப் பின் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைது குறித்து நாம் தமிழர் கட்சியினர் கூறும்போது, ``நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்ற வாகனங்களில் பிரபாகரன் புகைப்படம், பதாகைகள் இருந்ததைக் காரணம்காட்டி அங்கிருந்த பா.ஜ.க-வினர் நிவாரணப் பொருட்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி கோட்டயம் காவல்துறை கண்காணிப்பாளர் எங்களிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்குப் பின் விடுதலை செய்தனர்" எனத் தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க