தி.மு.க தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்! - 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்தனர்

தி.மு.க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேட்புமனுவை ஸ்டாலின் தாக்கல் செய்தார். 

ஸ்டாலின்

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவர் வகித்து வந்த திமுக தலைவர் பதவி காலியானது. கட்சி விதிப்படி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன்படி, தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தற்போது செயல்தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்புமனுவை ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அவருக்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக இருவரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு இருவரும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்றனர். அப்போது, கருணாநிதி நினைவிடத்தில் தங்களது வேட்புமனுவை வைத்து இருவரும் ஆசிபெற்றனர். தொடர்ந்து கோபாலபுரம் சென்றவர்கள் அங்கு தயாளும்மாளிடம் ஆசி வாங்கினர். 

இதற்கிடையே, ஸ்டாலினை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படாத பட்சத்தில் அவர் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்படுவார். நாளை மறுதினம் அல்லது 30ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அவர் தலைவராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, ``ஸ்டாலின் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்படுவார். அதுவே அனைத்தும் தி.மு.க-வினரின் விருப்பமும் கூட. இதேபோல் பொருளாளர் பதவிக்கும் துரைமுருகன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்" எனத் தெரிவித்தார். ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் தி.மு.க வரலாற்றில் கருணாநிதிக்கு பிறகு இரண்டாவது தலைவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!