வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (26/08/2018)

கடைசி தொடர்பு:16:20 (26/08/2018)

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு..!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டது. இதில் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வாஜ்பாய் அஸ்தியுடன் ஹெச் ராஜா

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி உடல்நலக் குறைவினால் உயிரிழந்தார். மறுநாள் டெல்லியில் அவரது உடல் ராணுவ மரியாதையுடன் எரியூட்டப்பட்டது. எரியூட்டப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி கலசங்களில் சேகரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, ராமேஸ்வரம், பவானி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் கரைப்பதற்காக டெல்லியில் இருந்து எடுத்து வரப்பட்டது. சென்னையில் இருந்து பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் காஞ்சிபுரம், கடலூர், நாகபட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை வழியாக நேற்று மாலை ராமநாதபுரம் வாஜ்பாய் அஸ்தி கொண்டு வரப்பட்டது. அங்கு அஸ்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதன் பின் நேற்று இரவு பாம்பன் வந்தடைந்தது. இன்று காலை பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட அஸ்தியானது ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து வேத மந்திரங்கள் முழங்க அக்னி தீர்த்த கடலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்ட பின்னர் அஸ்தியினை ஹெச்.ராஜா கடலில் கரைத்தார். இந்நிகழ்சியில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் குப்புராமு, சுப.நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் முரளிதரன், ஆத்ம கார்த்திக், ராமேஸ்வரம் நிர்வாகிகள் ஶ்ரீதர், நாகேந்திரன், ஜமாத் நிர்வாகிகள் அப்துல்ஹமீது, குலாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.