பட்டுக்கோட்டையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பஸ் - அசத்தும் தனியார் நிறுவனம்!

ஒருவர் அதிக தூரம் பயணம் மேற்கொள்ள, பைக், கார், ரயில், விமானம் போன்ற வாகனங்கள் இருக்கின்றன. ‘எனக்கு கார் ஒத்துக்கொள்ளாது’ என்பவர்களுக்கும், ரயில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கும், பலரது அவசரத்துக்கும் கைகொடுப்பவை  பேருந்துகள்தான்!

பஸ்

இதனாலேயே பேருந்துகளில் ஏசி மற்றும் டிவியைத் தாண்டி, செமி ஸ்லீப்பர்-ஸ்லீப்பர் கோச்-கழிப்பறை உடனான கேபின் என ரயில் மற்றும் விமானத்துக்குச் சமமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. நீண்ட நேரம்/தூரம் பேருந்தில் பயணிக்கும் பயணிக்கே இவ்வளவு சொகுசு அம்சங்கள் என்றால், அந்த பேருந்தை ஓட்டுபவர் களைப்பின்றி வாகனத்தை இயக்குவதும் அவசியம்தானே? இதற்காகத்தான், கார்களைப் போலவே பேருந்துகளிலும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட் மற்றும் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகிய வசதிகள் வந்துவிட்டன! இவற்றை நீங்கள் பெரும்பாலும் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்துக்கு நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்திலோ அல்லது பல்வேறு மாநகரங்களில் இயக்கப்படும் வால்வோ பஸ்களில் இதைப் பார்த்திருக்க முடியும்.

இந்நிலையில் நிவேதா என்கிற  தனியார் பேருந்து நிறுவனம், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட பேருந்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது எங்கே என்றால், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில். இது முதலில் பட்டுக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, இடையில் சில முக்கிய பேருந்து நிறுத்தங்களில் நின்று பின்னர் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தை வந்தடைகிறது. பின்னர் தஞ்சையில் இருந்து புறப்பட்டு, மீண்டும் பட்டுக்கோட்டைக்கு வந்துவிட்டு இறுதியாக அறந்தாங்கிக்குச் செல்கிறது.

 இந்த பேருந்தை ஒட்டுவது பற்றி அதன் ஓட்டுநரிடம் கேட்ட போது, "கார் மற்றும் ஸ்கூட்டரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதை நான் ஓட்டியதில்லை. என்றாலும், ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட பஸ்ஸை ஓட்டுறதுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு டிராஃபிக்கில் இது ரொம்ப வசதியாகவும் ஈஸியாகவும் இருக்கு. பஸ்ஸை முன்னாடி பின்னாடி இயக்குவதற்கு, தனித்தனி பட்டன் இருக்கு. இதனால் கிளட்ச்சை மிதிச்சு அடிக்கடி கியர் மாற்றத் தேவையில்லை. இதனாலேயே பஸ் இன்ஜினில் அடிக்கடி ஏதாவது பிரச்னை வரும். இங்கே பஸ் சரியான நேரத்தில் தானாகக் கியர் மாற்றிக் கொள்வதால், இன்ஜினில் கோளாறு வருவதற்கு வாய்ப்பே இல்லை. இதனாலேயே இந்தப் பஸ்ஸைப் பற்றி விசாரித்து விட்டு, பலர் தினசரி புகைப்படம் எடுத்துச் செல்கிறார்கள்'' என்றார் .

இது போல நகரத்தில் இயங்கும் பேருந்துகளில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைப் பொருத்துவது என்பது பாராட்டுக்குரியதே! இருப்பினும் அரசு பேருந்தைக் காட்டிலும்  தனியார் பேருந்துகள் சாலைகளில் மெதுவாகச் செல்வது என்பது மிகவும் அரிதாகிவிட்டது. இதுபோன்ற அம்சங்கள், ஓட்டுநரைக் கஷ்டமில்லாமல் பேருந்தை இன்னும் வேகமாகச் செலுத்துவதற்கு வழிசெய்துவிடுவதற்குச் சாத்தியங்கள் இருக்கிறது. எனவே கார்கள் மற்றும் லாரிகளைப் போலவே, அனைத்துப் பேருந்துகளிலும் அதிகபட்ச வேகத்தைக்  கட்டுப்படுத்தக்கூடிய வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பயன்படுத்தினால், எதிர்பாராமல் நிகழக்கூடிய விபத்துகளை ஓரளவுக்காவது குறைக்கமுடியும் எனத் தோன்றுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!