முக்கடல் சங்கமத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் வாஜ்பாய் அஸ்தியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கரைத்தார்.

அஸ்தி

முன்னாள் பிரதமரும் பா.ஜ.க மூத்ததலைவருமான வாஜ்பாய், உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 16-ம்தேதி காலமானார். ஆகஸ்ட் 17-ம்தேதி டெல்லியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாய் அஸ்தி கலசங்களில் சேகரிக்கப்பட்டு நாடுமுழுவதும் உள்ள நதிகள், கடல்களில் கரைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 6 இடங்களில் கரைப்பதற்காக அஸ்தி கலசம் பா.ஜ.க மாநில நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அஸ்தி கரைப்பதற்காக நாகர்கோவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கன்னியாகுமரி நான்கு வழிச் சாலை தொடங்கும் ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பந்தலில் வாஜ்பாய் படம் முன்பு அஸ்தி கலசம் வைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் அனைத்துகட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சிவபுராணம் பாடப்பட்டது. காலை 10.15 மணிக்கு ஜீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து எடுத்துவரப்பட்ட அஸ்தி 10.40 மணிக்கு திரிவேணிசங்கம 16 கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு ஆத்மசாந்தி பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அஸ்தி கலசத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலையில் சுமந்தபடி திரிவேணிசங்கமத்தில் கரைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!