போட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - நாளை மறுநாள் பதவியேற்பு | M.K.Stalin selected as a DMK chief

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (26/08/2018)

கடைசி தொடர்பு:19:00 (26/08/2018)

போட்டியின்றி தி.மு.கவின் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - நாளை மறுநாள் பதவியேற்பு

தி.மு.க தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாத நிலையில் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தலைவராகத் தேர்வாகியுள்ளார். 

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தலைவர் பதவிக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.  தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம், வேட்பு மனுவை ஸ்டாலின் அளித்தார். அவருக்கு 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். மேலும் புதுச்சேரியிலிருந்து நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதற்கு முன் சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் வேட்பு மனுவை வைத்து மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார்.  இதேபோன்று பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்தார். அவரும் ஸ்டாலினுடன் கருணாநிதியின் நினைவிடத்தில் வேட்பு மனுவை வைத்து ஆசி பெற்ற பின், வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் மாலை 4 மணியுடன் நிறைவுப்பெற்றநிலையில், தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்தநிலையில், இதுகுறித்து தெரிவித்த ஆர்.எஸ். பாரதி, 'தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் தலைவராகத் தேர்வு செய்படுகிறார்.  நாளை மறுநாள் நடைபெறவுள்ள தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்' என்று தெரிவித்தார்.