போலீஸ் விசாரணைக்கு போன மாணவன் ரயில்வே டிராக்கில் தலை துண்டித்து மரணம்! | Ponneri: College student's body recovered from railway track

வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (26/08/2018)

கடைசி தொடர்பு:20:05 (26/08/2018)

போலீஸ் விசாரணைக்கு போன மாணவன் ரயில்வே டிராக்கில் தலை துண்டித்து மரணம்!

பொன்னேரி அருகே ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர், ரயில்வே டிராக்கில் சடலமாக மீட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மாணவன் மௌலீஸ்வரன்

பொன்னேரி அருகேயுள்ள சின்னக்காவனம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவரின் மகன் மௌலீஸ்வரன். பொன்னேரி உலகநாதன் நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரியில் பி.ஏ.காமர்ஸ் இரண்டாம் ஆணடு படித்து வருகிறார். நேற்று முன் தினம் பொன்னேரி சின்னக்காவனம் பகுதியில்  நண்பர்களுடன் மௌலீஸ்வரன் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், மௌலீஸ்வரனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணைக்குக் அழைத்து போயுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை கும்மிடிப்பூண்டிக்கும்- எளாவூருக்கும் இடையிலான தண்டவாளத்தில்  தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மௌலீஸ்வரன் உடல் கிடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டுக் கிளம்பிய மகன், ரயில்வே ட்ராக்கில் அரை நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்ததை அறிந்த மாணவனின் பெற்றோர் ரயில்வே போலீஸை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  மாணவன் இறப்புக்கு நியாயம் கேட்டு பொன்னேரி ஆர்.டி.ஒ அலுவலகத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர். அது தவிர பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

`விசாரணையின் போது அவர் ஸ்டேஷனில் இருந்து பயந்து  தப்பித்து ஓடி  ரயில்வே ட்ராக்கில் விழுந்து இறந்தத் தகவலே இப்போதுதான் எங்களுக்கேத் தெரிய வந்திருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள் போலீஸார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்கின்றனர் அவரது உறவினர்கள். 

 இதனிடையே கும்மிடிப்பூண்டி  ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் 2 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.