தவறி விழுந்த சிட்டுக்குருவி... பேரன்புகாட்டி மீட்ட கோவை போலீஸ்!

கூட்டில் இருந்து தவறிவிழுந்து தவித்த குருவிக்குஞ்சை மீட்டு, அதற்கு கோவை போலீஸ்காரர் ஒருவர் அன்புசெலுத்திய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சிட்டுக்குருவி

கோவை மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், உக்கடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருகிறார். உக்கடம் பேருந்து நிலையம் அருகே அவர் பணியில் இருந்தபோது, பேருந்து நிலையத்தின் மேல் இருந்த கூட்டில் இருந்த குருவிக் குஞ்சு ஒன்று தரையில் விழுந்துகிடந்தது. அதைக் கண்ட காகம் ஒன்று, சிட்டுக்குருவியை தூக்கிச்செல்ல துரத்திக்கொண்டு வந்தது. அதைப் பார்த்த சிறப்பு உதவி ஆய்வாளர், அந்த சிட்டுக்குருவியை மீட்டு புறக்காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று, பாதுகாப்பாக வைத்தார். பின்னர், களைத்திருந்த  குருவிக்குஞ்சுக்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்து தயார்படுத்தினார். இதையடுத்து, அந்த  குருவிக்குஞ்சை மீண்டும் அதன் இருப்பிடத்திலேயே பாதுகாப்பாக வைத்தார் சந்திரசேகர்.

இதுகுறித்து அவர், “அழிந்துவரும் பறவை இனங்களின் பட்டியலில் சிட்டுக்குருவியும் இருக்கிறது. சிறு வயதில்  இந்த சிட்டுக்குருவிகளை எங்கள் ஊரில் அடிக்கடி பார்ப்பேன். ஆனால்,  தற்போது அதன் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உள்ளது. அதனால்தான், அந்தச் சிட்டுக்குருவி கீழே விழுந்ததும் அதை மீட்டு, அதற்கு உணவு கொடுத்து ,மீண்டும் அதன் இருப்பிடத்திலேயே வைத்தேன்” என்றார்.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!