வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (27/08/2018)

கடைசி தொடர்பு:08:55 (27/08/2018)

ஆட்சியர் அலுவலகத்தில் உயிருடன் 15 மரங்கள் வெற்றிகரமாக இடம் மாற்றம்!

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த 15 மரங்கள், நவீன இயந்திரங்களின் உதவியால் வேறு இடத்துக்கு வெற்றிகரமாக மாற்றி நடப்பட்டது.

 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 100 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கருங்கல் கட்டடம், மிக நுணுக்கமாகக் கட்டப்பட்டது. இது, அன்சுல் மிஸ்ரா , சகாயம் என்று பல அதிரடி கலெக்டர்களைக் கண்ட அலுவலகமாகும்.

தற்போது, இதே வளாகத்தில் புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. அதில், 15 மரங்கள் வெட்டவேண்டிய சூழல் இருந்தது. ஆனால், மரங்களை வெட்ட வேண்டாம்; அதை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என முன்னாள் கலெக்டர் வீர ராகவ ராவ், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், மதுரையில் பல்வேறு இடங்களில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி சேவை செய்துவரும் 'விவேக் நர்சரி கார்டன் குழுமம்' சார்பில், ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் மரங்களை வேருடன் பிடிங்கி ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக இருக்கும் வேறு இடங்களுக்கு உயிருடன் வெற்றிகரமாக மாற்றப்பட்டது. இது தொடர்பாக விவேக் நர்சரி கார்டன் குழும எம்.டி பூமணி கூறுகையில், “நவீன தொழில்நுட்பங்களோடு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரங்களை உயிருடன் இடமாற்றம் செய்துவருகிறோம். ஒரு மரம்கூட காய்ந்து வீணாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அதைப் பக்குவமாக எடுத்து வேறு இடத்தில் நடுகிறோம். இயற்கை உரங்களை மட்டும் நாங்கள் பயன்படுத்தி மரங்களை நடுவதால், அனைத்தும் வெற்றிகரமாகத் தொடர்ந்து வளர்ந்துவிடுகின்றன. இன்று, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேம்பு , புங்கை உள்ளிட்ட 15 மரங்களை உயிருடன் இடம் மாற்றம்செய்தோம். நாங்கள் கணக்கிட்டபடி அனைத்தையும் வெற்றிகரமாகச் செய்துமுடித்தோம்'' என்று தெரிவித்தார்.