`சர்வே பணி நடக்கிறது; விரைவில் கொள்ளிடம் பாலம் கட்ட டெண்டர்' - பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்! | For The new bridge survey work started in the kollidam dam

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (27/08/2018)

கடைசி தொடர்பு:11:35 (27/08/2018)

`சர்வே பணி நடக்கிறது; விரைவில் கொள்ளிடம் பாலம் கட்ட டெண்டர்' - பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்!

"உடைந்த கொள்ளிடம் பாலம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. புதிய பாலத்துக்கான வரைபடம் மற்றும் இடம் சர்வே பணி நடந்துவருகிறது. விரைவில் புதிய பாலம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கும்" என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
கொள்ளிடம்
 
கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் விளைவாக மேட்டூர் அணை நிரம்பிவழிந்தது. மேலும்,  தொடர்ந்து அளவுக்கதிகமான கனஅடி நீர் காவிரியில் திறந்துவிடப்படுவதால், கடந்த சில வாரங்களாக திருச்சி கொள்ளிடம் - காவிரி ஆற்றில் வெள்ளம்  கரைபுரண்டு ஓடியது. காவிரியில் அதிக தண்ணீர் வந்தால், முக்கொம்பு பகுதியில் இருந்து காவிரி ஆற்றைவிட, கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாகத் தண்ணீர் திறந்து விடப்படும். அதனடிப்படையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு  அதிகபட்சமாக முக்கொம்பிலிருந்து கொள்ளிடத்தில் 1 லட்சத்து 67 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
 
இதன் விளைவாக, கடந்த 22-ம் தேதி இரவு 8 மணியளவில், திருச்சி முக்கொம்பு பகுதியில் உள்ள கொள்ளிடம் மேலணை அதிக அளவிலான வெள்ளத்தில் 9 மதகுகள் அடுத்தடுத்து அடித்துச்செல்லப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் 1836-ம் ஆண்டில் கட்டப்பட்ட 182 வயதுடைய கொள்ளிடம் மேலணை, கொள்ளிடம் காவிரி ஆறுகளில் அதிக அளவில் எடுக்கப்பட்ட மணல் கொள்ளை காரணமாகப் பாதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 
உடைந்த கொள்ளிடம் பாலம்
இந்த நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, முதல்வரின் துணைச் செயலாளர் சாய்குமார், பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் ஆய்வுசெய்தனர். கடந்த 24-ம் தேதி அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், சரோஜா உள்ளிட்ட அமைச்சர்களும், திருச்சி மாவட்டச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பி.குமார்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திலிங்கம், ரத்தினவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் பரமேஸ்வரி, செல்வராஜ் ஆகியோருடன் ஆய்வுசெய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``உடைந்த  முக்கொம்பு கதவணைகளுக்குப் பதிலாக, உடைந்த அணைக்கு அருகில் 410 கோடியில் புதிய கதவணைகளைக் கட்ட உள்ளோம். 325 கோடி ரூபாயில் கொள்ளிடத்திலும், அதன் அருகில் உள்ள அய்யன் வாய்க்காலில் 85 கோடியில் கதவணைகள் கட்டப்படும். இதற்கான ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணிகள் ‌ 15 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும்'' என்று அறிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன் சீரமைப்புப் பணிகள் தொடங்கியது. இந்தப் பணிகள், ஒரு வாரத்துக்குள் முடிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்காக ராட்சத இயந்திரங்கள், தொழில்நுட்பக் குழுவினர்கள் வரவழைக்கப்பட்டு, இரும்புக் கம்பிகள், மணல் மூட்டைகள், பில்லர்கள் கொண்டு அமைக்கும் சீரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. இதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உடைந்த கொள்ளிடம் பாலம் அருகே புதிய பாலம் கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை நேற்றிலிருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுவருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், "தற்போதைக்கு உடைந்த கொள்ளிடம் பாலம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. புதிய பாலத்துக்கான வரைபடம் மற்றும் இடம் சர்வே செய்யப்பட்டுவருகிறது. விரைவில் கொள்ளிடம் மற்றும் இப்பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டு, பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும்" என்றார்கள்.