வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (27/08/2018)

கடைசி தொடர்பு:13:35 (27/08/2018)

கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிய மகள்! நடனப் பள்ளி ஆசிரியரிடம் நகையைப் பறித்துச்சென்ற தந்தை

மகளை நடனப் பள்ளியில் சேர்த்துவிடுவதுபோல பாசாங்குசெய்து, மிளகாய்ப்பொடி தூவி நடனப் பள்ளி ஆசிரியரிடம் நகையைப் பறித்த கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளது.

நகை பறிப்பு கும்பல்

திருச்சி மாநகரம், பாலக்கரை, மாமுண்டிசாமி கோயில் தெருவைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகள் மகேஸ்வரி, கே.கே.நகர் மகாத்மா காந்தி தெருவில், அபூர்வா அகாடமி என்ற பெயரில் நடனப் பயிற்சிப் பள்ளி நடத்திவருகிறார். இவர், கடந்த 24-ம் தேதி இரவு 7.30 மணியளவில்  அலுவலகத்தில் இருந்தபோது,  தந்தை போல ஒருவரும் ஒரு பெண்ணும் வந்துள்ளனர். தனது மகளை நடனப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என மகேஸ்வரியிடம் கேட்டுள்ளார். திடீரென, அந்தப் பெண்  மகேஸ்வரி மீது மிளகாய்ப்பொடியைத் தூவியுள்ளார்.  அதைத் தொடர்ந்து, பெண்ணுடன் வந்தவர், கையில் வைத்திருந்த  கத்தியால் மகேஸ்வரியைத் தாக்கிவிட்டு,  நகைகளைப் பறித்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பினர். இதில், மகேஸ்வரியின் வலதுகை விரல்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மகேஸ்வரியின் தாய்மாமனான திருச்சி காஜாமலை சந்திரா ஸ்கூல் தெருவைச் சேர்ந்த  முருகேசன் என்பவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணைசெய்தனர். அப்போது, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மகேஸ்வரியின் நகைகளைப் பறிக்கத் திட்டம் போட்டுக்கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலத்தின் அடிப்படையில், முருகேசனின் கூட்டாளியான ஸ்ரீரங்கம் பாடசாலை தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, அவரது மனைவி இளஞ்சியம் மற்றும் காட்டுப்புத்தூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன், அவரது மகள் சோமபிரபா  ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். சோமபிரபாவை நடனப் பள்ளியில் சேர்ப்பதைப் போன்று மகேஸ்வரியின் நிறுவனத்துக்குள் சென்று கொள்ளையடித்தது தெரியவந்தது.  இதையடுத்துப் பிடிபட்டவர்களிடம்  12 பவுன் நகைகள், கத்தி, மோட்டார் சைக்கிள்  உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க