வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (27/08/2018)

கடைசி தொடர்பு:13:02 (27/08/2018)

`ஆபாச சி.டி-க்கள்... மாத்திரைகள்'- விடுதி வார்டன் பாபு சாமுவேல் சிக்கியது எப்படி?

திருமுல்லைவாயல் விடுதி


சென்னை திருமுல்லைவாயல் விடுதி வார்டன் பாபு சாமுவேலை  போலீஸார் கைதுசெய்தனர். அவரின் அறையிலிருந்து ஆபாச சி.டி-க்கள், மாத்திரைகளை போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர். 

சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் செயல்பட்ட சிறுவர், சிறுமியர் இல்லத்தில் மாணவ, மாணவியருக்கு பாலியல் தொல்லைகொடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில், விடுதியை நடத்திய ஜேக்கப், அவரின் மனைவி விமலா மற்றும் அங்கு வேலைபார்த்த பாஸ்கர், முத்து ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்தனர். மாணவ, மாணவியருக்கு பாலியல் தொல்லைகொடுத்த வார்டன் பாபு சாமுவேலை போலீஸார் தேடிவந்தனர். அவரை சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஷோபா ராணி மற்றும் போலீஸார் நேற்று கைதுசெய்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர், பாபு சாமுவேல். இவருக்குத் திருமணமாகி ஓராண்டுக்குள் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.  அதனால், தனியாகத்தான் பாபு சாமுவேல் வாழ்ந்துவந்துள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு, திருமுல்லைவாயல் விடுதியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு, கடந்த 15 ஆண்டுகளாக விடுதியைப் பொறுப்பாகப் பார்த்துவந்துள்ளார். பாபு சாமுவேலை எல்லோரும் நல்லவர் என்றுதான் கருதியுள்ளனர். வார்டனாகப் பணியாற்றிய அவர், பல வில்லங்கச் செயல்களில் ஈடுபட்டுள்ளது தற்போதுதான் வெளியில் தெரியவந்துள்ளது. 

பாபு சாமுவேலுக்கு 54 வயதாகுகிறது. ஆனால் அவர், என்றும் 16 வயது வாலிபர் போல வாழ்ந்துள்ளார். குறிப்பாக, ஓரினச்சேர்க்கை பழக்கம் அவருக்கு இருந்துள்ளது. பள்ளி முடிந்து விடுதிக்குத் திரும்பும் மாணவர்களைத் தனியாக அழைத்துச்சென்று பேசுவதுண்டு. மாணவர்களின் குடும்பச் சூழ்நிலையைத் தெரிந்துகொண்ட பிறகு, அவர்களைத் தன்னுடைய வலையில் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்த்துவார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களை அடித்துள்ளார். இதற்குப் பயந்தே சில மாணவர்கள், பாபு சாமுவேல் கூறியதை எல்லாம் செய்துள்ளனர். அவரின் மனதுக்குப்பிடித்தமான மாணவர்களுக்கு, விடுதியில் ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. சிறு வயதிலே பல மாணவர்கள் பாபு சாமுவேலிடம் அடிமையாக வாழ்ந்துள்ளனர். 

 விடுதி வார்டன் பாபு சாமுவேல்

மாணவிகளையும் அவர் விடவில்லை. பத்து வயதுக்குக் குறைவான மாணவிகளிடம் எல்லைமீறி நடந்துள்ளார். ஆனால், அதில் பல மாணவிகள், தங்களுக்கு நடக்கும் கொடுமை என்னவென்றே தெரியாமல் இருந்ததுதான் அதிகபட்ச கொடுமை. வயதுக்கு வந்த மாணவியிடம் அவர் எல்லைமீறி நடந்துள்ளார். அதில், அந்த மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தகவல் எதுவும் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்டார் பாபு சாமுவேல். அவருக்கு உறுதுணையாகச் சிலர் விடுதியில் இருந்துள்ளனர். மேலும், அங்கு வேலைபார்க்கும் பெண்களிடமும் பாபு சாமுவேலுக்கு பழக்கம் இருந்துள்ளது. எல்லோரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், அவரின் வில்லங்க விவகாரம் விடுதியைத் தாண்டி வெளியில் தெரியாமல் இருந்துள்ளது. அம்பத்தூர் மாஜிஸ்திரேட் அனிதாவிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்தான், பாபு சாமுவேல் மற்றும் அவருக்கு உதவியவர்கள் எங்களிடம் சிக்கியுள்ளனர்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பாபு சாமுவேல் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தினோம். அப்போது, அந்த அறையிலிருந்து ஆறு ஆபாச சி.டி-க்கள், சில மாத்திரைகளைப் பறிமுதல்செய்துள்ளோம். அந்த மாத்திரைகள் குறித்து விசாரித்துவருகிறோம். இதற்கிடையில், அந்த அறையில் சில தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பாபு சாமுவேலுக்கு எதிரான தகவல்கள் எங்களிடம் சிக்கியுள்ளன. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றார். 

சிக்கியது எப்படி? 

பாபு சாமுவேலால் ஓரினச்சேர்க்கைப் பழக்கத்துக்குத் தள்ளப்பட்ட 16 வயது மாணவர் ஒருவர், சென்னை ஐ.சி.எஃப். பகுதியில் பெற்றோருடன் குடியிருக்கிறார். அந்த மாணவனும், அவரின் சகோதரரும் இந்த விடுதியில்தான் தங்கிப் படித்துள்ளனர். அப்போதுதான் பாபு சாமுவேலின் நட்பு அந்த மாணவனுக்குக் கிடைத்துள்ளது. இந்தச் சமயத்தில், 16 வயதுக்கு மேல் உள்ள மாணவர்களை விடுதியில் தங்க அனுமதிப்பதில்லை.  அதனால் இவர், விடுதியிலிருந்து வீட்டுக்குப் அனுப்பப்பட்டுள்ளார். இருப்பினும், மாணவனுக்கும் பாபு சாமுவேலுக்கும் உள்ள நட்பு தொடர்ந்துள்ளது. இந்தத் தகவல் கிடைத்ததும், பாபு சாமுவேலைப் பிடிக்க அவனை துருப்புச் சீட்டாக போலீஸார் பயன்படுத்தினர். மாணவனைப் பார்க்க வந்தபோதுதான், பாபு சாமுவேலை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். சம்பந்தப்பட்ட மாணவனிடமும் விசாரித்தபோது, பாபு சாமுவேல் குறித்த முழுவிவத்தையும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.