வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (27/08/2018)

கடைசி தொடர்பு:15:30 (27/08/2018)

விழுப்புரத்தில் எய்ம்ஸ் அமைக்க உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் உத்தரவு

மதுரைக்குப் பதிலாக விழுப்புரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. 

உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில், 'மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்' என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. விழுப்புரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், விழுப்புரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அதைத் தள்ளுபடிசெய்து, கடந்த டிசம்பர் மாதத்தில் உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், ``தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய 5 மாவட்டங்களில் ஒன்றாக விழுப்புரம் விளங்குகிறது. அந்த மாவட்டத்தில், சுமார் 34 லட்சம் மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். அவர்களின் நலன் கருதி, விழுப்புரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க உத்தரவிட வேண்டும். இந்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் சரியாக விசாரிக்கத் தவறிவிட்டது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. 

இந்த நிலையில், மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, அந்த மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது. இதுபோன்ற மனுக்களுக்கு வழக்கு நடத்த ஆகும் செலவுத் தொகை அபராதமாக விதிக்கப்படும் எனவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா எச்சரித்தார்.