சேலம் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்கியது!

சேலம் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

கொள்ளை

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு, சேலத்திலிருந்து புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், அதிகாலை 4.16 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலில், சேலம் பகுதியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து அழுக்கான ரூபாய் நோட்டுகள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு தனிப் பெட்டிமூலம் அனுப்பப்பட்டிருந்தன. 226 மரப்பெட்டிகளில் 342.75 கோடி ரூபாய் இருந்தது. கோடிக்கணக்கான மதிப்பில் பணம் கொண்டுவந்ததால், ஆயுதப்படை உதவி கமிஷனர் நாகராஜ் தலைமையில் 9 பேர் பாதுகாப்புக்காகத் துப்பாக்கியுடன் ரயிலில் பயணித்தனர். இவர்கள் பயணித்த ரயில் பெட்டிக்கு மூன்று பெட்டிகள் தள்ளி பணம் ஏற்றப்பட்ட பெட்டி இருந்தது. 9-ம் தேதி காலை 10.45  மணியளவில் ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர் நடராஜன் முன்னிலையில் பணம் ஏற்றப்பட்டு வந்த பெட்டி திறக்கப்பட்டது. அப்போது, ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிடப்பட்டிருந்தது.  அதைக்கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், 5.75 கோடி ரூபாய் கொள்ளைபோனது தெரியவந்தது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்துவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சேலம் - விழுப்புரம் இடையே அதிகமான ரயில்வே கிராஸிங் இருந்ததால் ரயில் மெதுவாகச் சென்றுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர். ரயில் நின்றபோதெல்லாம் பாதுகாப்புப் படையினர் அந்தப் பெட்டியைக் கண்காணித்துவந்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் கொள்ளைச் சம்பவம்குறித்து எந்தத் துப்பும்  கிடைக்காமல் இருந்தது. இந்த விவகாரத்தில், தொழில்நுட்ப உதவியுடன் கொள்ளையர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

ரயில் பயணித்த தடத்தில் உபயோகத்தில் இருந்த செல்போன்களின் எண்கள் ஆராயப்பட்டன.  அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. தற்போது இந்த வழக்கில், கொள்ளையர்கள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. தொழில்நுட்பரீதியாக இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கொள்ளைக் கும்பல் இதில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சிபிசிஐடி, தனிப்படை அமைத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்துவந்தது. அவர்களுக்குக் கிடைத்த தகவல்களில், இந்த வழக்கு பல்வேறு திசைகளில் பயணமானது. தொழில்நுட்ப உதவியுடன் இந்த வழக்கு சரியான திசையில் பயணித்து ,தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இதுகுறித்து  சிபிசிஐடி போலீஸார் ஒருவர் கூறுகையில், “சேலத்தில் இருந்து சென்னை சென்ற அந்த ரயில் தடத்தில், உபயோகத்தில் இருந்த செல்போன் எண்களை ஆராய்ந்தோம். இந்த எண்களுக்கு இடையே ஒற்றுமை இருப்பதைக் கண்டறிந்தோம். அவர்கள் குறித்த தகவல்களைக் கண்டறிந்தோம். இவர்கள் அனைவரும் மத்தியப்பிரதேசம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அந்த எண்களில் உள்ள முகவரிகளை ஆராய்ந்ததில், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும். நாடு முழுவதும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. 4-5 பேர் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். சிபிசிஐடி-யைச் சேர்ந்த சிறப்புப் பிரிவு காவலர்கள், மத்தியப்பிரதேச காவல்துறையினருடன் இணைந்து அந்தக் கும்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  சேலம் ரயில்நிலையம் மற்றும் சேலம் - விழுப்புரம் இடையேயான தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்கள்மூலம் கண்காணிக்கப்பட்டுவருகிறது. குற்றவாளிகள் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள், தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள்'' என்று தெரிவித்தார்.

மேலும், இவ்வளவு பெரிய தொகை ரயிலில் கொண்டுசெல்லப்படுவது குறித்து இங்கு உள்ளவர்கள் அளித்த தகவலின் பேரிலேயே கொள்ளையர்களுக்குத் தெரியவந்திருக்கும். முழுத்தொகையையும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், 226 மரப்பெட்டிகளை உடைத்துக் கொள்ளையடிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அடுத்த நாள் காலை 11 மணியளவில்தான் திருட்டுப்போன தகவல் தெரியவந்தது. எனவே, கொள்ளையர்கள் 10 மணி நேரத்துக்கு முன்பே தப்பிச்சென்றிருக்கலாம் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!