வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (27/08/2018)

கடைசி தொடர்பு:16:30 (27/08/2018)

மருத்துவப் படிப்பில் 69 சதவிகித இட ஒதுக்கீடுக்கு எதிரான மனு - உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 சதவிகித இடஒதுக்கீடுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைத் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், `மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் 1992-ல் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதனால், பொதுப் பிரிவிலுள்ள மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு பின்பற்றும் 69 சதவிகித இட ஒதுக்கீடு முறையை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்கவேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, `மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இடஒதுக்கீடுக்கு எதிரான மூலவழக்கு நவம்பர் மாதம் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.