வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (27/08/2018)

கடைசி தொடர்பு:16:30 (27/08/2018)

முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு?

தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனை மீண்டும் கட்சியில் சேர்க்க ஸ்டாலின் அழைப்பு விடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திமுக முல்லை வேந்தன்

தி.மு.கவின் தர்மபுரி மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமாக இருந்தவர் முல்லை வேந்தன். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியின் வெற்றிக்குத் துணை நிற்காமல் துரோகம் செய்துவிட்டதாகவும், தி.மு.க வெற்றிக்குச் சரியாகப் பணி செய்யவில்லை போன்ற காரணங்களால் தி.மு.க பொதுச்செயலாளர் கே.அன்பழகன் இவரைக் கட்சியிலிருந்து நீக்கினார். மன்னிப்புக் கடிதம் அளித்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படும் என தி.மு.க தலைமை முன்னதாகக் கூறியிருந்தது. ஆனால், முல்லை வேந்தன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். பின்னர், 2016-ம் ஆண்டு தே.மு.தி.க.வில் இணைந்து சில பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். அதன் பின் தே.மு.தி.க.விலும் பெரிய நாட்டம் காட்டாமல் சற்று விலகியே இருந்தார்.

மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தபோது இரண்டு முறை வந்து முல்லை வேந்தன் பார்த்துள்ளார். மேலும் கருணாநிதி மறைவுக்குப் பிறகும் கோபாலபுரம் இல்லத்துக்கும் ராஜாஜி ஹாலுக்கும் முல்லை வேந்தன் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தநிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதி இறந்த பிறகு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது முல்லை வேந்தனையும் கட்சியில் சேர்க்க வேண்டும் எனப் பல தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் முல்லை வேந்தனை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ஸ்டாலினிடமிருந்து முல்லை வேந்தனுக்கு அழைப்பு செல்லும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.