வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (27/08/2018)

கடைசி தொடர்பு:19:30 (27/08/2018)

`உபயம் டாஸ்மாக்’ என எழுதாமல் இருந்தால் சரி- அமைச்சரைக் கிண்டலடித்த ராமதாஸ்!

டாஸ்மாக் வருமானத்தில்தான் ஆசிரியர்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது எனக் கூறிய அமைச்சர் கே.சி.வீரமணி குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். 

ராமதாஸ்

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்று  வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது மது அருந்திவிட்டு அ.தி.மு.க தொண்டர் ஒருவர் அமைச்சரின் பேச்சுக்கு கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார். உடனடியாக போலீஸாரை அழைத்து மது அருந்தியவரை அப்புறப்படுத்தச் சொன்னதுடன் இந்தச் சம்பவம் குறித்துப் பேசும்போது, ``டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என் துறைக்குத்தான் வருகிறது. டாஸ்மாக் விற்பனை லாபத்தால்தான்  ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். அதிலிருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதனால் அவரை எதுவும் செய்ய முடியாது. அவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால் வருமானம் குறைந்துவிடும்; வளர்ச்சிப் பணிகள் எல்லாம் கெட்டுப்போய்விடும்" என்று சிரித்துக்கொண்டே கூறினார். இவரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிராகப் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

தற்போது அமைச்சரின் பேச்சை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``அனைத்துப் பள்ளிகளின் பெயர் பலகைகளிலும் ‘உபயம்: டாஸ்மாக்’ என்று எழுதவும், ஆசிரியர்கள் தினமும் 100 முறை ‘டாஸ்மாக் துணை’ என்று எழுதவும் ஆணையிடாதவரைச் சரி" எனக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க