வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (27/08/2018)

கடைசி தொடர்பு:21:00 (27/08/2018)

`நீங்கள் கேட்ட பணத்துடன் காத்திருக்கிறேன்'- லுங்கியுடன் சிக்கிய அரசு அதிகாரி

 பணம் வாங்கச் சென்ற அரசு அதிகாரி

சென்னை அம்பத்தூரில் லஞ்சம் வாங்க லுங்கியோடு சென்ற அரசு அதிகாரி அருளை விஜிலென்ஸ் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கட்டளைப் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவர், காஞ்சிபுரம் மாவட்ட சிறு, குறு தொழில் மையத்தில் மானிய விலையில் மர அறுவை இயந்திரம் வாங்க லோனுக்கு விண்ணப்பித்தார். இவரின் விண்ணப்பத்தை ஏற்று, 2,30,000 ரூபாய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து லோன் பணத்தைப் பெற வேண்டும் என்றால் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் அருளுக்கு 35,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சுனில்குமாரிடம் பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டது. பிறகு, 33,000 ரூபாய் தருவதாக அவர் ஒத்துக்கொண்டதாகத் தெரிகிறது. 

இதற்கிடையில், சுனில்குமார், தன்னிடம் லஞ்சம் கேட்ட விவரத்தை விஜிலென்ஸ் போலீஸாரிடம் தெரிவித்தார். அவர்கள் கூறிய ஆலோசனைப்படி இன்று அதிகாலை அருள், வீடு அமைந்துள்ள அம்பத்தூர், வெங்கடாபுரத்துக்கு சுனில்குமார் சென்றார். வீட்டுக்கு வெளியிலிருந்தபடியே அருளிடம், நீங்கள் கேட்ட பணத்துடன் காத்திருக்கிறேன்' என்று போனில் கூறினார். அதன்பிறகு லுங்கி அணிந்தபடி அருள் வெளியில் வந்தார். பணத்தை சுனில்குமாரிடம் வாங்கியபோது மறைந்திருந்த ஏ.டி.எஸ்.பி இளங்கோவன் தலைமையிலான விஜிலென்ஸ் போலீஸார் அவரைப் பிடித்தனர். பிறகு அவரிடம் விசாரித்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் அருளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நாங்கள் கண்காணித்துவந்தோம். அப்போதுதான் அவர் சுனில்குமாரிடம் லஞ்சம் கேட்ட தகவல் கிடைத்தது. உடனடியாக சுனில்குமார் மூலம் அருளை கையும் களவுமாகப் பிடித்துள்ளோம். அருளின் சொத்து விவரங்களை ஆய்வு செய்துவருகிறோம். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.