வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (27/08/2018)

கடைசி தொடர்பு:15:19 (28/08/2018)

சமூக சேவை செய்தவர்கள் கைது... போலீஸை கலங்கடித்த நீதிபதி

கரூர் அமராவதி ஆற்றில் இருந்த சீமைக் கருவேலம் மரங்களைப் பொக்லைன் வைத்துச் சுத்தப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதியோடு நாம் தமிழர் கட்சியினர் முயன்றனர். ஆனால், அவர்களைக் கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, ``இது சமூக சேவைதான். அதனால், இவர்களை ரிமாண்ட் செய்ய முடியாது’’ என்று நீதிபதி மறுத்ததோடு, காவல்துறையையும் கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியினர்

கேரளாவுக்கு நிவாரணம் வழங்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தடுத்து பா.ஜ.க-வினர் பிரச்னை செய்த சம்பவம் ஏற்கெனவே நடந்த நிலையில், கரூர் சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ள அணையிலிருந்து வரும் அமராவதி ஆறு கரூர் நகரத்துக்கு நடுவே ஓடி திருமுக்கூடலூர் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றோடு சங்கமிக்கிறது. ஆனால், கடந்த 6 வருடங்களாகத் தண்ணீர் வராமல் வறண்ட அமராவதி ஆற்றில், இந்த வருடம் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ததால், தண்ணீர் வந்தது. ஆனால், ஆற்றுக்குள் காடுபோல் வளர்ந்திருந்த சீமை கருவேலம் மரங்கள் அரசு தரப்பில் அப்புறப்படுத்தவில்லை.

இந்தநிலையில், `நாங்கள் அதை அகற்றுகிறோம்' என்று மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கிய நாம் தமிழர் கட்சியினர், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் நன்மாறனின் தலைமையில் ஜே.சி.பி இயந்திரம் சகிதம் தூய்மைப்படுத்த முயன்றனர். கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் அமராவதி ஆற்றைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினரைக் கரூர் நகர டி.எஸ்.பி கும்மராஜா தலைமையில் போலீஸார் தடுத்தனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 13 பேர்களைக் கைது செய்ததோடு, அவர்கள் ஆற்றைச் சுத்தப்படுத்த பயன்படுத்திய ஜே.சி.பி இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதனால், அந்தக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸார் கைது செய்த 13 பேர்களையும் கரூர் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் அவசரம் அவசரமாக ஆஜர்படுத்தினர். ஆனால், நீதிபதியோ, "கடந்த 20-ம் தேதி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இதுதொடர்பாக ஆற்றைச் சுத்தப்படுத்த வேண்டி நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர். இதற்கு அரசு தரப்பில் எந்தவித எதிர்ப்பும் இல்லாத நிலையில், இவர்கள் ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது சமூக சேவைதான். அதனால், இவர்களை ரிமாண்ட் செய்ய அவசியமில்லை. அப்படிச் செய்தால், இளைஞர்கள் இதுபோன்ற சமூக சேவைகளில் ஈடுபட முன்வரமாட்டார்கள்" என்று மறுத்ததோடு, 'காவல்துறை விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும்' என்று அறிவுறுத்தியதோடு, அவர்களைக் கடுமையாக எச்சரிக்கவும் செய்தார்.