கேரள வெள்ள பாதிப்புக்கு 10,000 ரூபாய்! - சேமிப்பை வாரிக் கொடுத்த மாற்றுத்திறனாளிகள்

கேரள மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குத் தங்களுடைய ஒரு வருட சேமிப்பைக் கொடுத்திருக்கிறார்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவிகள்.

கரூர் மாவட்டம், ஆத்தூரில் இயங்கி வருகிறது மானவு என்கிற மனவளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பள்ளி. இந்தப் பள்ளியை சிவக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். இந்தச் சிறப்புப் பள்ளியில் 50 மனவளர்ச்சிக் குன்றிய மாணவர்கள் உள்ளனர். மனோதத்துவ மருத்துவரான சிவக்குமார், இந்த மாணவர்களைச் சுயதொழில் முனைவோர் ஆக்கும் வகையிலான தொழிற்பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார். அதன்மூலம் வரும் வருமானம், பெற்றோர்கள் செலவுக்காகக் கொடுக்கும் பணம் ஆகியவற்றைச் சேமித்து வைக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறார். அந்தவகையில் சேர்ந்த பணத்தில் 10,000 ரூபாயைத்தான் கேரள வெள்ள நிவாரணத்துக்காக வழங்கியுள்ளனர். இந்தப் பணத்தை கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷிடம் வழங்கியுள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷ், "எனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. தங்களது உண்டியல் சேமிப்பை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்குவதை நினைத்து நெகிழ்கிறேன். என் குழந்தையையும் இப்படி ஈகை உணர்வு, மனிதாபிமானம் கொண்டவளாகத்தான் வளர்த்து வருகிறேன்" என்றார் உருக்கத்துடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!