வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (28/08/2018)

கடைசி தொடர்பு:00:00 (28/08/2018)

வழக்கத்தைவிடக் கூடுதல் சம்பளம்... நடுராத்திரியில் அரளிப்பூ பறிக்கும் பெண்கள்

அரளிப் பூ பறிக்கும் பெண்கள்

முல்லை, மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, சம்பங்கி உள்ளிட்ட மலர்சாகுபடியை பல்லாயிரம் ஏக்கரில் மேற்கொண்டுவருகிறார்கள் தமிழக விவசாயிகள் பலரும். அதிகாலை நேரத்தில் தேவையான ஆட்களுடன் பூந்தோட்டத்தில் இறங்கி மடிகூட்டி செடிகளில் பூத்துக்கிடக்கும் பூக்களைப் பறித்து பொழுது விடிவதற்குள் பூமார்க்கெட்டுக்கு அனுப்பிட வேண்டும். தினந்தோறும் வருமானம் கொடுக்கும் பூ விவசாயத்தை, விடிஞ்சா காசு தரும் பணப்பயிர் என்பார்கள் விவசாயிகள் சிலர்.

பெரும்பாலான மலர்களை அதிகாலை நேரத்தில்தான் பறிக்கத் தொடங்குவார்கள். வெயில் வருவதற்குள் பறித்து முடித்து விடுவார்கள். ஆனால், அரளிபூக்களை மட்டும் அப்படிப் பறிக்க முடியாது. நட்ட நடு நிசியில்தான் பறிக்க வேண்டும். அதற்கு என்ன காரணம். பல்வேறு மலர் சாகுபடியை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை முன்னோடி மலர் விவசாயி பேபி. அவர் கூறுகையில், ``எப்போதுமே பூக்களை அதிகாலை நேரத்தில்தான் விவசாயிகள் பறிப்பார்கள். பறிக்கும் பூக்கள் பொழுது விடிந்த பிறகும் சில மணிநேரம் மொக்கு விரியாமல், விரிந்த பூ இதழ்கள் வாடி உதிர்ந்து போகாமல் பளபளப்புடன் இருக்கும். அதனால் பூ சந்தைக்குக் காலதாமதமாக கொண்டு போனாலும் காசு பார்க்கலாம். ஆனால், அரளிப்பூக்கள் அப்படியானதல்ல. செடி ஒன்று, ஆயிரக்கணக்கில் மொட்டு விட்டிருக்கும். அதிகாலை காரிருள் வெளிச்சம் பட்டால்கூட மலர்ந்து விடும் தன்மை கொண்டவை அரளிப்பூக்கள்.

விரிந்த பூக்கள் வெயில் பட்டதும் விரைவில் வாடி உதிர்ந்து விடும். மேலும் அரளிப்பூக்கள் பெரும்பாலும் இறை வழிபாடுகளுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. கதம்ப மாலைகளில் அரளிப்பூக்களுக்கு முக்கிய இடமுண்டு. அதன் உதிரிப்பூக்களைத் தூவி பக்தர்கள் கூறும் பெயருக்கு  அர்ச்சனை செய்யும் வழக்கமும் இருக்கிறது. கோயில்களில் நடக்கும் அதிகாலை பூஜைகளில் அரளிப்பூக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், பறிக்கும் மொக்குகள் மலரும் முன்பாக வியாபாரிகளுக்குக் கொண்டு சேர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் மலர் விவசாயிகள் உள்ளார்கள். எனவே, அதை மனதில் வைத்துத்தான் நடு நிசிநேரம் தொடங்கி அதிகாலை காரிருள் வேளை வரை அரளிமொக்குக்களைப் பறிக்கிறார்கள் விவசாயிகள். குறிப்பாக பூப்பறிக்கும் வேலையைப் பெண்கள்தான் ஆர்வமுடன் மேற்கொள்ளுவது வழக்கம்.

எங்க தோட்டத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் அரளிப்பூ சாகுபடி செஞ்சிருக்கோம். சுழற்சி முறையில் நாள்தோறும் 25 கிலோ அரளிப்பூக்களை பறிச்சு, விடிவதற்குள் பொள்ளாச்சி பூ மார்க்கெட்டுக்கு அனுப்பிடுவோம். அங்கிருந்து கோயம்புத்தூர், பாலக்காடுனு பல ஊர்களுக்கு வியாபாரிங்க அனுப்பிடுவாங்க. விடிவதற்குள் பூக்களைப் பறிச்சு அனுப்ப வேண்டும் என்பதால்தான், அர்த்த சாமத்தில் அரளிவயலில் இறங்கி மொக்குகளைப் பறிக்க தொடங்கினால்தான் காரிருள் நேரத்துக்குள் பறித்து முடிக்க முடியும். இரவு நேரத்தில் பூ பறிப்பதால், பூ பறிக்கும் பெண்களுக்குக் நெத்தி பாட்டரி விளக்கு கொடுத்துள்ளோம். அதிக பிரகாசமாக வெளிச்சத்தை வீசும்  எல்.இ.டி. பல்புக்கள் பொருத்தப்பட்ட பட்டை விளக்கை நெத்தியில் கட்டிக்கொண்டு பகல் போன்ற அந்த வெளிச்சத்தில் பூ பறிக்கும் வேலையைப் சிரமம் இல்லாமல் மேற்கொள்கிறார்கள். இரவு 12 மணிக்குத் தொடங்கும் வேலை அதிகாலை 4 மணிக்கு முடிந்து விடும். இரவு வேலை பார்க்கும் பெண்களுக்குக் காவலாக  நானும் என் கணவரும் அரளிவயலில் வலம் வந்து கொண்டே இருப்போம். விடிவதற்குள் இரண்டு முறை சுடச்சுட சுக்கு காபியும் சுண்டலும் கொடுத்து உபசரித்து அவர்களின் தூக்க களைப்பை போக்கிடுவோம். அர்த்த சாம பூப்பறிப்பில் ஈடுபடும் பெண்களுக்கு வழக்கத்தைவிட கூடுதலாகச் சம்பளம் கொடுப்பதால் அவர்களும் ஆர்வமுடன் பூப்பறிக்க வருகிறார்கள்'' என்றார்.