வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (27/08/2018)

கடைசி தொடர்பு:16:11 (27/08/2018)

டி.ஐ.ஜி மனைவியையும் விட்டுவைக்கவில்லை - அதிர்ச்சியில் போலீஸ் 

 போலீஸ் டிஐஜி மனைவியிடம் செயின் பறிக்கும் காட்சி

சென்னை பெசன்ட் நகரில் குடும்பத்தினருடன் நடந்துசென்ற ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஐ.ஜி மனைவியின் தாலிச் செயின் பறிக்கப்பட்டச் சம்பவம் போலீஸாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, அடையாறு, இந்திரா நகர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் எஸ்.ஜி.கே.பிள்ளை. இவர், மத்திய உளவுப்பிரிவில் டி.ஐ.ஜி-யாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி பொன்னாள் 58 வயதாகும் இவர் கடந்த 26-ம் தேதி குடும்பத்தினருடன் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றார். பிறகு இரவு 10.30 மணியளவில் வீட்டுக்குத் திரும்பினார். நான்காவது பிரதான சாலையில் பொன்னம்மாள் நடந்து சென்றபோது அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவரின் கழுத்தில் கிடந்த தாலிச் செயினைப் பறித்தனர். இதனால், பொன்னம்மாள் அதிர்ச்சியடைந்தார். திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். பைக்கில் சென்றவர்களை பொன்னம்மாளின் உறவினர்கள் பிடிக்க முயன்றனர். 

ஆனால், அவர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்துவிட்டனர். இதையடுத்து, சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் பொன்னம்மாள் புகார் கொடுத்தார். அதில் தன்னுடைய 5 சவரன் தாலிச் செயினை பைக்கில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரித்துவருகின்றனர். அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். ஓய்வுபெற்ற போலீஸ் உயரதிகாரியின் மனைவியின் தாலிச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் போலீஸாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.