வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மாணவர்கள்! - பேரன் இறந்த வேதனையில் உயிரைவிட்ட பாட்டி

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர் ஆற்றுநீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு மாணவனின் பாட்டி தனது பேரனை இழந்த அதிர்ச்சியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.


பலியான மாணவர்கள்
 

கடந்த சில வாரங்களாக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இங்குள்ள நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என அரசுத் தரப்பில் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்களான கிருபாகரன், செல்வகுமார், விவேக் மூன்று பேரும் நேற்று மதியம் இப்பகுதியில் உள்ள நெய்குன்னம் வெண்ணாற்றில் குளித்திருக்கிறார்கள். அப்பொழுது தண்ணீரின் வேகம் திடீரென அதிகரித்ததால் மூன்று பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

உடனடியாக அம்மாபேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி தேடி கிருபாகரன், விவேக் ஆகிய இருவரின் உடல்களை மீட்டனர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு செல்வகுமாரின் உடலும் மீட்கப்பட்டது. உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான கிருபாகரனின் பாட்டி, தனது பேரனை இழந்த அதிர்ச்சியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த உயிரிழப்புகள் அம்மாபேட்டைப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!