``முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் கேரள அரசின் திட்டம் அம்பலம்!'' - பெ.மணியரசன் பேச்சு | kerala decide to demolish mulla periyar dam says maniyarasan

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (28/08/2018)

கடைசி தொடர்பு:15:17 (28/08/2018)

``முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் கேரள அரசின் திட்டம் அம்பலம்!'' - பெ.மணியரசன் பேச்சு

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவுக்கு தமிழ்நாடுதான் காரணம் என கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது. இது பொய்யான தகவல் என்றும், இதனை தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரங்கள் தகர்த்துள்ளதாகவும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார்.

மணியரசன்

இது தொடர்பாக பேசிய பெ.மணியரசன், ``வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு மிகவும் வேதனைக்குரியது. அங்குள்ள மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு வகைகளிலும் மனிதநேய உதவிகளை வழங்கி வருகிறார்கள். ஆனால், கேரள ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டின் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி, திடீரென்று ஆகஸ்ட் 15, 16 ஆகிய நாள்களில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விட்டதுதான் கேரளத்தின் வெள்ளப் பேரழிவுக்கு முதன்மைக் காரணம் என்று அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு தனது தவற்றை மூடி மறைத்து வருகிறது. தமிழ்நாட்டின் மீது பழிபோடும் கேரளத்தின் பொய்க் கூற்றை தமிழ்நாடு அரசு சரியான புள்ளி விவரங்களுடன் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் எதிர் உறுதி மனு (Counter Affidavit) தாக்கல் செய்து, கேரளாவுக்கு பதிலடிகொடுத்துள்ளது.

வெள்ளப் பெருக்கும் பேரழிவும் உச்சத்துக்குப் போன ஆகஸ்ட் 14 முதல் 19 வரையிலான ஆறு நாள்களில் கேரளம் தனது இடுக்கி அணையிலிருந்தும், இடமலையாறு அணையிலிருந்தும் திறந்துவிட்ட மொத்த நீர் 36 டி.எம்.சி. இதில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இதே காலத்தில் திறந்துவிட்ட நீரின் பங்கு 6.65 டி.எம்.சி மட்டுமே! மிகக் குறைவாக 6 நாள்களில் திறந்துவிட்ட 6.65 டி.எம்.சி. தண்ணீர்தான் இவ்வளவு பெரிய வெள்ளப் பேரழிவுக்குக் காரணம் என்று கேரள அரசு சொல்வது எவ்வளவு பெரிய பொய். ஆகஸ்ட் 15 அன்று 12,000 கன அடிதான் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. கேரளா சொல்வதுபோல் திடீரென்று பெருவெள்ளமாய் அதிகளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. அடுத்து, 16.08.2018 அன்று 24 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. அடுத்த நாள்களில் திறந்துவிடும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. முல்லைப் பெரியாறு அணையை இடித்துத் தரை மட்டம் ஆக்க வேண்டுமென்ற கேரளத்தின் சதித்திட்டம் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது” என அவர் தெரிவித்தார்.