வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (28/08/2018)

கடைசி தொடர்பு:09:00 (28/08/2018)

கேரளாவில் தமிழக மருத்துவக்குழு 20,000 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழக - கேரள எல்லைப் பகுதியில், தமிழக அரசு சார்பில் 40 மருத்துவக் குழுக்கள், 322 மருத்துவ முகாம்கள் அமைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
விஜயபாஸ்கர்
 
விபத்துகளில் சிக்கியவர்களுக்கு வெளிநாடுகளில் சிகிச்சையளிப்பதுகுறித்த  மருத்துவ முறையைத் தெரிந்துகொள்வதற்காக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு  சொந்த ஊர் திரும்பிய அவருக்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறைத் தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், புதுக்கோட்டை அ.தி.மு.க நகரச் செயலாளர் பாஸ்கரன், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நேரில் வந்து அமைச்சரை வாழ்த்தினர்.
 
இதையடுத்து, புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில்  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கேரள அரசுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில்முதல் தவணையாக ரூ.1 கோடி மதிப்பிலான மருந்துப் பொருள்களும், 2-வது தவணையாக ரூ.1.20 கோடி மதிப்பில் 1.5 லட்சம் குளோரின் மாத்திரைகள், பாம்பு கடி மருந்துகள், சர்க்கரை நோய்க்கான இன்சுலின் மருந்துகள் உள்ளிட்ட சுமார் 100 டன் கிரிமி நாசினிகள் அனுப்பப்பட்டுள்ளன.3-வது தவணையாக தற்போது ரூ.1.5 கோடி மதிப்பில், 500 டன் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட கிரிமி நாசினிகள் அனுப்பப்பட உள்ளது. 
 
தமிழகத்தில், கடந்த ஆண்டு கனமழை பாதிப்பு ஏற்பட்டபோது, நோய்த்தொற்று பாதிக்காதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதேபோன்று, கேரளாவில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பில் தொற்று நோய் பாதிக்காமல் இருப்பதற்கு நாம் பின்பற்றிய மருத்துவ முறைகளை கேரள அரசு பயன்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல், தமிழகத்திலிருந்து 10 பூச்சியியல் வல்லுநர்கள் கேரளாவுக்குச் சென்று பணியாற்றிவருகின்றனர். தமிழக -  கேரள எல்லைப் பகுதியில் தமிழக அரசு சார்பில் 40 மருத்துவக் குழுக்கள், 322 மருத்துவ முகாம்கள் அமைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, அந்த அரசுடன் விபத்துக்களின்போது ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு, சிகிச்சை அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த நாட்டிலிருந்து மருத்துவர்கள் தமிழகத்துக்கு வந்து சிகிச்சை அளிப்பதற்கும் நம்முடைய மருத்துவர்கள் அங்கே சென்று மருத்துவ முறைகுறித்து கற்றுக்கொள்வதற்கும் உதவும்" என்றார்.
 
அதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். புதுக்கோட்டை ஆலங்குடியை அடுத்த வடகாடு  கிராமத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வடகாடு மாரியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.
 
மேலும் இன்று, பொன்னமராவதி பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழாக்களில் கலந்துகொள்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க